தேடுதல்

Vatican News
'Populorum Progressio' அறக்கட்டளை அங்கத்தினர்களுடன் திருத்தந்தை (14-12-2017) 'Populorum Progressio' அறக்கட்டளை அங்கத்தினர்களுடன் திருத்தந்தை (14-12-2017)  (Vatican Media)

168 சமுதாயப்பணி திட்டங்களுக்கு திருத்தந்தையின் நிதியுதவி

இலத்தீன் அமேரிக்கா, மற்றும் கரீபியன் பகுதிகளில் உள்ள 23 நாடுகளில், 168 சமுதாயப்பணி திட்டங்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உதவிகளை வழங்கியுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தையின் சார்பில் முன்னெடுக்கப்படும் தர்மப்பணிகளின் ஒரு பகுதியாக, இலத்தீன் அமேரிக்கா, மற்றும் கரீபியன் பகுதிகளில் உள்ள 23 நாடுகளில், 168 சமுதாயப்பணி திட்டங்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உதவிகளை வழங்கியுள்ளார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் ஒரு பகுதியாக இயங்கும், 'மக்களின் முன்னேற்ற அறக்கட்டளை' என்று பொருள்படும் 'Populorum Progressio Foundation' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், இலத்தீன் அமெரிக்காவிலும், கரீபியன் பகுதிகளிலும், அதிகத் தேவையில் இருக்கும் வறியோர் நடுவே மக்கள் முன்னேற்றத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவிட்-19 கொள்ளைநோயின் தாக்கத்திற்கு ஒரு பதிலிருப்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பரிந்துரையால், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவை உருவாக்கியுள்ள 'கோவிட்-19 செயல்குழு', மக்களின் முன்னேற்றத்தை மையப்படுத்தி 138 திட்டங்களையும், மக்களின் பசிபோக்கும் 30 பணிகளையும் துவக்கியுள்ளது.

இத்திட்டங்களைக் குறித்து, ஜூலை மாத இறுதியில் நடைபெற்ற ஒரு மெய் நிகர் கருத்தரங்கில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் பேசுகையில், 'Populorum Progressio' அறக்கட்டளை ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார்.

இத்தாலிய ஆயர் பேரவை வழங்கும் நிதி உதவியுடன் 'Populorum Progressio' அறக்கட்டளை, பழங்குடியினரின் வாழ்வுத் தரத்தை உயர்த்தும் பல்வேறு பணிகளைத் துவக்கியுள்ளது.

அமெரிக்க கண்டத்தில் நற்செய்தி அறிவிப்புப்பணி துவக்கப்பட்ட 5ம் நூற்றாண்டை சிறப்பிக்கும் வண்ணம், 1992ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களால் உருவாக்கப்பட்ட 'Populorum Progressio' அறக்கட்டளை, கொலம்பியா நாட்டின் பொகோட்டாவில் (Bogotá) தன் செயலகத்தைக் கொண்டு பணியாற்றிவருகிறது.

06 August 2020, 14:48