திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை 

மறைக்கல்வியுரை : இயேசுவின் குணமளிக்கும் பணியில் திருஅவை

கொள்ளைநோய் உருவாக்கியுள்ள மிகப்பெரும் சவால்களுக்கு பதிலளிப்பதில், கிறிஸ்தவர்களாகிய நமக்கு, விசுவாசம், நம்பிக்கை, மற்றும், அன்பு வழிகாட்டுகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஒவ்வோர் ஆண்டும் கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு, ஜூலை மாதத்தில் திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரைகள் இடம்பெறுவதில்லை என்பது நாம் அறிந்ததே. ஒரு மாத இடைவெளிக்குப்பின் ஆகஸ்ட் 05, இப்புதனன்று, திருத்தந்தையின் மறைக்கல்வியுரை தொடர்ந்தது. கோவிட்-19 கொள்ளைநோயால் இத்தாலி நாடு பாதிப்படையத் துவங்கிய காலத்திலிருந்து, தன் நூலக அறையிலிருந்தே, புதன் மறைக்கலவி உரைகளை வழங்கிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்றும் அவ்வாறே தொடர்ந்தார்.

இன்று உலகை பாதித்துவரும் கொள்ளைநோய் குறித்து, 'உலகை குணமாக்கும்', என்ற தலைப்பில், புதிய ஒரு தொடரை இப்புதன் மறைக்கல்வியுரையில் ஆரம்பித்தார்,  திருத்தந்தை பிரான்சிஸ். முதலில், முடக்குவாதமுற்றவர் குணம் பெற்ற புதுமை குறித்து மாற்கு நற்செய்தி 2ம் பிரிவின் முதல் பகுதி வாசிக்கப்பட்டது.

சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே, அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். […]  “மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார். எனவே, அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ” என்றார். (மாற்கு 2,1-5.10-11)

பின், திருத்தந்தை, தன் மறைக்கல்வியுரையைத் துவக்கினார்.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இன்றைய கொள்ளைநோய் உருவாக்கியுள்ள மிகப்பெரும் சவால்களுக்கு பதிலளிப்பதில், கிறிஸ்தவர்களாகிய நமக்கு, விசுவாசம், நம்பிக்கை, மற்றும், அன்பு என்னும் நற்பண்புகளில் இருந்து பிறந்த ஞானமும் பலமும் வழிகாட்டுகின்றன. இறைவனின் கொடைகளாகிய இந்த நற்பண்புகள், நம்மை குணப்படுத்துவதோடு, கிறிஸ்துவின் குணமளிக்கும் இருப்பை இவ்வுலகிற்கு எடுத்துச் செல்ல நமக்கு உதவுகின்றன. இந்த நற்பண்புகள் நம்மில் உருவாக்கியுள்ள புதிய உணர்வுகள், இவ்வுலகை அச்சுறுத்திவரும், பல்வேறு தீமைகளை எதிர்கொள்வதற்குரிய பலத்தை நமக்கு வழங்குகின்றன. மனிதகுல குடும்பத்தின் வருங்காலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அநீதியான, அழிவுதரும் செயல்பாடுகளை மாற்றியமைக்கவும், இன்றைய உலகில் ஆழமாக வேரூன்றியுள்ள, உடலளவிலான, சமூக அளவிலான, ஆன்மீக அளவிலான பலவீனங்களையும், குறைபாடுகளையும் எதிர்கொள்ள, இறைவனின் கொடையாக வரும் நற்பண்புகள் நமக்கு உதவுகின்றன. திருஅவை, இயேசுவின் குணமளிக்கும் பணியை, தனியாருக்கு மட்டுமல்ல, சமுதாயம் முழுமைக்கும் தொடர்ந்து வழங்கும் வழிகளைத் தேடுகிறது. மனித மாண்பு, பொது நலன், ஏழைகளுக்கு முன்னுரிமை, பொருட்கள் அனைவரையும் சென்றடைதல், ஒருமைப்பாடு, துணையமைப்புகளின் வழி உதவுதல், பொது இல்லமாகிய இவ்வுலகைக் குறித்த அக்கறை போன்ற, நற்செய்தி காட்டும் மதிப்பீடுகளை பரிந்துரைத்து, இப்பணியை திருஅவை ஆற்றுகிறது, 

வருகிற வாரங்களில் இவை குறித்தும், திருஅவையின் சமூகக் கோட்பாடுகளில் காணப்படும் கருத்துக்கள் குறித்தும் சிந்தனைகளை பகிர்ந்துகொள்ளவுள்ளேன். இந்த கருத்துக்கள், இன்றைய உலகின் சமூகப் பிரச்சனைகள் குறித்து தெளிவான ஒரு கண்ணோட்டத்தை வழங்கி, அடுத்த தலைமுறையினருக்கு வருங்கால நம்பிக்கையுடன்கூடிய ஓர் உலகை கட்டியெழுப்ப உதவும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை, தன் நூலக அறையிலிருந்து வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெபனானில், ஆகஸ்ட் 04, இச்செவ்வாய்கிழமை மாலையில் இடம்பெற்ற வெடிகுண்டு விபத்துக்கள் குறித்து, தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார். பின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2020, 13:23