மூவேளை செப உரை 160820 மூவேளை செப உரை 160820 

திருத்தந்தை: தாழ்மையுள்ள நம்பிக்கைக்கு எல்லைகள் இல்லை

“ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னை உம்மால் குணமாக்க இயலும்” என்ற மன்றாட்டோடு, நமது சொந்தக் கதையை அவரிடம் நாம் எடுத்துச் செல்லவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னை உம்மால் குணமாக்க இயலும்” என, இயேசுவிடம் சென்று, அவரது இதயத்தைத் தட்டுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 16, இஞ்ஞாயிறன்று கூறினார்.

இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கானானியப் பெண் ஒருவரின் வேண்டுகோளுக்கேற்ப, தீய ஆவி பிடித்த அவரது மகளை இயேசு குணமாக்கிய புதுமை (மத்.15.21-28) பற்றிய இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி தன் சிந்தனைகளை வழங்கினார்.

துன்பத்திலிருந்து வெளிவந்த கதறல்

யூதரல்லாத மக்கள் வாழ்ந்த கலிலேயாவிற்கு வடக்கே இயேசு சென்றுகொண்டிருந்தவேளை, கானானியப் பெண் ஒருவர், அவரை அணுகி, ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறினார் எனவும், வேதனையினால் வேண்டிக்கொண்ட, நிராதரவான ஓர் அன்னையின் கதறலாக அது இருந்தது எனவும் திருத்தந்தை கூறினார்.

இயேசுவின் வியப்பு

“இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்றும், “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றும் குறிப்பிட்டு, இயேசு, அந்த அன்னையை தொடக்கத்தில் புறக்கணித்தாலும், “ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என்று, நம்பிக்கை நிறைந்த ஞானத்தோடு அந்த அன்னை அளித்த பதில், அவரை வியக்க வைத்தது என்று, திருத்தந்தை கூறினார்.

எத்தகைய நம்பிக்கை பெரிது என்பது குறித்த சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது காயப்பட்ட கடந்தகாலத்தை இயேசுவின் காலடிகளில் வைத்து, அதைக் குணமாக்கும்படி அவரிடம் மன்றாடும்போது, நமது நம்பிக்கை பெரிதாகவும், பொருள்ளதாகவும் மாறுகின்றது என்று விளக்கினார்.

நம் கதையை ஆண்டவரிடம் கொணர்வோம்

நாம் ஒவ்வொருவரும் ஒரு கதையைக் கொண்டிருக்கிறோம், அந்தக் கதை, பலநேரங்களில், கடினமானதாக, வேதனை, இடையூறுகள், மற்றும் பாவங்கள் நிறைந்ததாக உள்ளது என்று கூறியத் திருத்தந்தை, அந்த நமது கதையை வைத்து, நாம் என்ன செய்கிறோம், அதை மறைக்கிறோமா? என்ற கேள்வியையும், நம் ஒவ்வொருவரையும் நோக்கி எழுப்பினார்..

“ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னை உம்மால் குணமாக்க இயலும்” என்ற மன்றாட்டோடு, நமது சொந்தக் கதையை அவரிடம் நாம் எடுத்துச் செல்லவேண்டும் என்பதை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு நற்செய்தியில், அந்த கானானியப் பெண் நமக்குக் கற்றுத்தருவது இதுவே என்று கூறினார்.

நாம் இருப்பதுபோலவே இயேசு நம்மை அன்புகூர்கிறார்

இயேசுவின் முகத்தை, எப்போதும் நம் முன்னே நாம் வைத்திருந்தால், நாமும் அந்தப் பெண்ணைப் போல, ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னை உம்மால் குணமாக்க முடியும் என, இயேசுவிடம் சென்று அவரது இதயத்தைத் தட்டுவோம் என்று திருத்தந்தை கூறினார்.

அன்பு மற்றும், பரிவிரக்கத்தோடு, நமது பாவங்களை, தவறுகளை மற்றும், நமது தோல்விகளைத் தாங்குகின்ற இயேசு, நாம் இருப்பதுபோலவே நம்மை அன்புகூர்கிறார் என்று கூறியத் திருத்தந்தை, நற்செய்தி பிரதி ஒன்றை, நாம் அனைவரும், எப்போதும், நம் பைகளில், ஏன், நமது கைபேசிகளிலும் வைத்திருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நற்செய்தியில், இயேசு தாம் இருப்பதுபோலவே தம்மை வெளிப்படுத்துகிறார், நமது நலனை அளவற்றவிதமாய் விரும்புகின்ற, நம்மை அன்புகூர்கின்ற இயேசுவை, அதில் நாம் கண்டுகொள்ளலாம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை, இயேசுவின் அருகில் செல்வதற்கு நாம் துணிவைப் பெறுமாறு, அன்னை மரியாவின் பரிந்துரையை நாடுவோம் என்று சொல்லி, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 August 2020, 12:30