தலை ஒட்டி பிறந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுடன் தலை ஒட்டி பிறந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுடன்  

திருத்தந்தைக்கு ஆப்ரிக்க தாயின் கடிதம்

2015ல் திருத்தந்தை மத்திய ஆப்ரிக்க குடியரசின் தலைநகரில் திறந்துவைத்த கதவு, முடிவற்ற வாழ்வை நோக்கிய பாலம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடவுள் நம்மை தேர்ந்தெடுத்துள்ளது, நம் நன்மைத்தனத்தால் அல்ல, மாறாக, நாம் சிறியவர் என்ற நம் உணர்வினாலேயே என, ஆகஸ்ட் 11, இச்செவ்வாயன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'நம் நன்மைத்தனத்தால் அல்ல, மாறாக, நாம் சிறியவர்கள், மற்றும், நாம் சிறியவர் என்பதை ஏற்றுக்கொள்ளும் நம் உணர்வால், இறைவன் நம்மை தேர்ந்தெடுத்துள்ளார்', என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

இதற்கிடையே, தலை ஓட்டிப்பிறந்த தன்  இரு குழந்தைகளைப் பிரித்து வாழவைக்க உதவியதுடன், அவர்களுக்கு, சில நாட்களுக்கு முன்னர், தன் கையாலேயே திருமுழுக்கு வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நன்றிக்கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார், ஆப்ரிக்கத் தாய் ஒருவர்.

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசைச் சேர்ந்த Hermine Nzotto என்ற பெண்மணிக்கு தலை ஒட்டியேப் பிறந்த இரு பெண்குழந்தைகளை உரோம் நகருக்கு கொணர்ந்து, வத்திக்கான் நிதியுதவி பெறும், 'குழந்தை இயேசு' மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வழியாகப் பிரித்து அவைகளை உயிர் பிழைக்க உதவியுள்ள திருத்தந்தைக்கு நன்றி தெரிவிப்பதாக அப்பெண்மணியின் கடிதம் உரைக்கிறது.

தன் குழந்தைகள் காப்பாற்றப்பட உதவியதுடன், சில நாட்களுக்கு முன்னர் சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில், அக்குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்கியதன் வழியாக, ஏழை எளியோரின் அருகில் இறைவன் எப்போதும் இருக்கிறார் என்பதை திருத்தந்தை உணர வைத்துள்ளதாக Nzotto அவர்கள், தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2015ம் ஆண்டு, மத்திய ஆப்ரிக்க குடியரசிற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Bangui நகர் பேராலயத்தின் புனிதக் கதவுகளைத் திறந்து வைத்தது பற்றி தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள Nzotto அவர்கள், திருத்தந்தை திறந்துவைத்த புனிதக் கதவு, அங்குள்ள மக்களின் முடிவற்ற வாழ்வுக்குரிய பாலம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இரு தலைகளும் ஒட்டிப்பிறந்த தன் பெண் குழந்தைகள் பிரிக்கப்பட உதவிய அனைத்து மருத்துவர்களுக்கும் தன் நன்றியை வெளியிட்டுள்ளார் அத்தாய்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 August 2020, 13:01