கத்தோலிக்கக் கோவில்களிலேயே பெரியதெனக் கருதப்படும் புனித பேதுரு பெருங்கோவில் கத்தோலிக்கக் கோவில்களிலேயே பெரியதெனக் கருதப்படும் புனித பேதுரு பெருங்கோவில் 

உண்மையான அமைதிக்குத் தேவையான இறையருள்

"தீமை ஒருபோதும் அமைதி தராது. அது முதலில் பரபரப்பை உருவாக்கி, பின்னர், கசப்புணர்வை விட்டுச்செல்கிறது. அதற்கு மாறாக, உண்மையான நன்மைத்தனத்தையும், அமைதியையும் தேடிச் செல்ல இறைவன் நம்மை அழைக்கிறார்" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உண்மையான அமைதியையும், அதற்குத் தேவையான இறையருளையும் இணைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 1, இப்புதனன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

"தீமை ஒருபோதும் அமைதி தராது. அது முதலில் பரபரப்பை உருவாக்கி, பின்னர், கசப்புணர்வை விட்டுச்செல்கிறது. அதற்கு மாறாக, இறைவனின் குரல், எளிதான, கீழ்த்தரமான சுகத்தைப் பெறுவதற்கு ஒருபோதும் உறுதி அளிப்பதில்லை. தான் என்ற அகந்தையை விடுத்து, உண்மையான நன்மைத்தனத்தையும், அமைதியையும் தேடிச் செல்ல இறைவன் நம்மை அழைக்கிறார்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

மேலும், ‘மதிப்பிற்குரிய புனித பேதுருவின் துணி’ என்று பொருள்படும் Reverenda Fabrica Sancti Petri என்ற அமைப்பிற்கு ஆணையராக, பேராயர் மாரியோ ஜியோர்தானோ (Mario Giordana) அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 30 இச்செவ்வாயன்று நியமித்தார்.

கத்தோலிக்கக் கோவில்களிலேயே பெரியதெனக் கருதப்படும் புனித பேதுரு பெருங்கோவில் கட்டடம், மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கட்டுமானங்களை நிர்வகிப்பதற்கென உருவாக்கப்பட்டுள்ள ‘மதிப்பிற்குரிய புனித பேதுருவின் துணி’ என்ற அமைப்பின் ஆணையராக பேராயர் ஜியோர்தானோ அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளி அமைப்புகளுடன், திருப்பீடம் மற்றும் வத்திக்கான் நகரத்தின் பணி ஒப்பந்தங்கள், வெளிப்டையானதாகவும், ஊழலற்றதாகவும் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்தும் அப்போஸ்தலிக்க ஏடு  ஒன்றை, ஜூன் 1ம் தேதியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார்.

Motu Proprio என்ற வடிவில், அதாவது, சுய விருப்பத்தின்பேரில் திருத்தந்தையால் வெளியிடப்பட்ட அந்த ஏடு 30 நாள்களுக்குப்பின் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து, திருத்தந்தை எடுத்துள்ள முதல் செயல்பாடாக, பேராயர் ஜியோர்தானோ அவர்களின் நியமனம் அமைந்துள்ளது என்று கருதப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 July 2020, 14:31