துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் மசூதியாக மாற்றப்பட்டுள்ள Hagia Sophia கிறிஸ்தவப் பேராலயம் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் மசூதியாக மாற்றப்பட்டுள்ள Hagia Sophia கிறிஸ்தவப் பேராலயம் 

Hagia Sophiaவை நினைக்கையில் மனம் வேதனையடைகின்றது

துருக்கி நாட்டில், அண்மையில் மசூதியாக மாற்றப்பட்ட Hagia Sophia பசிலிக்கா மற்றும், இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட கடல் ஞாயிறு ஆகியவை பற்றி, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

துருக்கி நாட்டில், அண்மையில் மசூதியாக மாற்றப்பட்ட Hagia Sophia பேராலயம், மற்றும், ஜூலை 12, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட கடல் ஞாயிறு ஆகியவை பற்றி, ஜூலை 12, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 12, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, விதைப்பவர் உவமை பற்றிய இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மூவேளை செப உரை வழங்கியபின்னர், ஜூலை மாதம் இரண்டாவது ஞாயிறன்று, உலக கடல் நாள் சிறப்பிக்கப்படுகின்றது என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடல்சார் தொழில்புரியும் அனைவருக்கும், குறிப்பாக, தங்களின் அன்புறவுகள் மற்றும், சொந்த நாடுகளைவிட்டு  வெகுதொலைவில், கடலில் பணியாற்றும் எல்லாருக்கும், எனது பாசம்நிறைந்த வாழ்த்துக்களையும், இத்தாலி நாட்டின் Civitavecchia-Tarquinia துறைமுகத்தில் நிறைவேற்றப்பட்ட திருப்பலியில் பங்குகொண்ட அனைவருக்கும், எனது சிறப்பான வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன் என்றுரைத்தார், திருத்தந்தை  பிரான்சிஸ்.

மக்களின் வாழ்வுக்குத் தேவையான முக்கியப் பணிகளை ஆற்றும் கடல்சார் தொழில்புரியும் அனைவரையும், ஒவ்வோர் ஆண்டும் கடல் ஞாயிறன்று செபிக்க அழைப்பு விடுக்கும் திருஅவை, இவ்வாண்டில், கோவிட்-19 நெருக்கடிநிலைகளுக்கு மத்தியில் பணியாற்றும் இவர்களை சிறப்பாக நினைத்து செபிக்குமாறு, இஞ்ஞாயிறன்று கேட்டுக்கொண்டுள்ளது.

Hagia Sophia

கடலில் பணியாற்றுவோரை நினைக்கும்போது, அது, துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றையும் நினைவுக்குக் கொணர்கிறது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Hagia Sophia கிறிஸ்தவப் பேராலயம், மசூதியாக மாற்றப்பட்டுள்ளது குறித்து திருப்பீடம் வேதனையடைகின்றது என்று கூறினார்.

இந்த புனித சோஃபியா பேராலயத்தை நினைக்கையில் எனது மனம் மிகவும் வேதனையடைகின்றது என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

துருக்கி அரசுத்தலைவர் தய்யிப் எர்டோகான் அவர்களின் தீர்மானத்தின்பேரில், இஸ்தான்புல் நகரிலுள்ள Hagia Sophia அருங்காட்சியகம், மசூதியாக மாற்றப்பட, ஜூலை 10, கடந்த வெள்ளியன்று நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற நீலநிற Hagia Sophia மையம், துருக்கி நாட்டில், கி.பி. 537ம் ஆண்டில் கிறிஸ்தவப் பேராலயமாக எழுப்பப்பட்டு, பின்னர் ஒரு மசூதியாகவும், அதன்பின்னர், அருங்காட்சியமாகவும் மாற்றப்பட்டது. தற்போது மசூதியாக மாற்றப்பட்டுள்ளது.  

சோஃபியா அருங்காட்சியகம்

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரத்தில், கி.பி.537ம் ஆண்டில், ஜூஸ்டீனியன் பேரரசர் காலத்தில், பைசான்டைன் கலைநுட்பத்துடன் எழுப்பப்பட்ட, இந்த சோஃபியா கிறிஸ்தவ பேராலயம், அக்காலத்தில் உலகில் மிகப்பெரிய கட்டடமாக விளங்கியது. மேலும், அக்காலத்தின் பொறியியல் கலைக்கும் இது சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது. அதன் மிகப்பெரிய மேல்கோபுரம் மிகவும் புகழ்பெற்றது.

இந்த Hagia Sophia மையம், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தையின் பேராலயமாக இருந்தது. பின்னர், அது ஒட்டமான் பேரரசு காலத்தில் மசூதியாக மாற்றப்பட்டது. அண்மைய சில ஆண்டுகளாக, அந்த மையம், அருங்காட்சியமாக (Ayasofya Müzesi), சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வந்துள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 July 2020, 13:10