கோவிட்-19 சூழலில் அமேசான் பகுதி கோவிட்-19 சூழலில் அமேசான் பகுதி 

Sem Terra இயக்கத்தை பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ்

சமுதாயத்தில் மிகவும் நலிவுற்றவர்கள், இக்கொள்ளைநோய் காலத்தில், பட்டினியை சமாளிக்க உதவியாக, Sem Terra இயக்கம், அவர்களுக்கு 2,500 டன் உணவுப்பொருள்களை வழங்கியுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய் பிரச்சனையுடன் போராடிவரும் பிரேசில் நாட்டில், பட்டினிக்கு எதிராகவும் போராடிவரும் Sem Terra என்ற இயக்கத்தின் முயற்சிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாராட்டியுள்ளார்.

பிரேசில் நாட்டில் நிலமற்ற தொழிலாளிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள Sem Terra இயக்கம், சமுதாயத்தில் மிகவும் நலிவுற்றவர்கள், இக்கொள்ளைநோய் காலத்தில், பட்டினியை சமாளிக்க உதவியாக, அவர்களுக்கு 2,500 டன் உணவுப்பொருள்களை வழங்கியுள்ளது.

இந்த முயற்சியைப் பாராட்டி, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் பிரிவின் செயலர், கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள், திருத்தந்தையின் பெயரால் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

நகரங்களின் ஓரங்களில் வாழும் வறியோரின் தேவைகளைத் தீர்க்கும் வண்ணம் உணவு வழங்கிவரும் Sem Terra இயக்கத்தின் பணிகள் குறித்து, திருத்தந்தையும், தானும் தங்கள் மகிழ்வை வெளியிடுவதாக, கர்தினால் செர்னி அவர்கள் இச்செய்தியில் கூறியுள்ளார்.

பசித்திருந்தோரைக் கண்டதும், இயேசு, பரிவுகொண்டு, அப்பத்தைப் பலுகச்செய்து, அவர்களுக்கு வழங்கினார் என்றும், அவர்கள் வயிறார உண்டபின், உணவு மீதம் இருந்தது என்றும் கூறும் நற்செய்திப் பகுதியை (மாற்கு 6:34-44) கர்தினால் செர்னி அவர்கள் தன் செய்தியில் நினைவுகூர்ந்துள்ளார்.

இயேசு அப்பத்தைப் பலுகச்செய்த புதுமையைப் போல, Sem Terra இயக்கத்தின் நற்செயல்கள், பலருக்கு உந்துசக்தியாக அமைந்து, உலகின் பசி தீர்க்கும் நற்செயல்கள் பெருகவேண்டும் என்று கர்தினால் செர்னி அவர்களின் செய்தி வாழ்த்துகிறது.

நிலமற்ற தொழிலாளிகள், நிலங்களில் பயிரிடும் நோக்கத்துடன், 1980ம் ஆண்டு துவக்கப்பட்ட Sem Terra இயக்கம், தற்போது, பிரேசில் நாட்டின் 24 மாநிலங்களில், 4,70,000 குடும்பங்களுக்கு உதவிகள் செய்து வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 July 2020, 13:31