திருத்தந்தை பிரான்சிஸ், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருத்தந்தை பிரான்சிஸ், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்  

அருள்பணி ஜார்ஜ் இராட்சிங்கர் மறைவுக்கு திருத்தந்தை அனுதாபம்

தங்கள் சகோதரரை, இறைவன், வாக்களிக்கப்பட்ட இல்லத்திற்கு அழைத்துச் செல்லவும், பிரமாணிக்கமாக இறைவனுக்குப் பணியாற்றிய அந்த ஊழியனுக்குரிய பரிசை அவருக்கு வழங்கும்படியாகவும் செபிக்கிறேன் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ்: வத்திக்கான் செய்திகள்

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் மூத்த சகோதரர், அருள்பணி ஜார்ஜ் இராட்சிங்கர் அவர்களின் மறைவைக் குறித்து தன் ஆழ்ந்த அனுதாபத்தையும், செபங்களையும் தெரிவித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தங்கள் அன்புக்குரிய சகோதரரின் மரணம் குறித்த துயரமான செய்தியை, அனைவருக்கும் முன்னதாக தனக்கு தெரிவித்ததற்காக நன்றி என்று தன் மடலை துவக்கியுள்ள திருத்தந்தை, முன்னாள் திருத்தந்தையின் ஆழ்ந்த வேதனையில் தானும் ஆன்மீக வழியில் ஒன்றித்திருப்பதாகக் கூறியுள்ளார்.

தங்கள் சகோதரரை இறைவன் வாக்களிக்கப்பட்ட இல்லத்திற்கு அழைத்துச் செல்லவும், வாழ்நாளெல்லாம் பிரமாணிக்கமாக இறைவனுக்குப் பணியாற்றிய அந்த ஊழியனுக்குரிய பரிசை இறைவன் அவருக்கு வழங்கும்படியாகவும் தான் செபிப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

அன்னை மரியாவின் பரிந்துரையால், தாங்கள் இறைவனின் ஆறுதலை பெறுவதற்கு தந்தையிடம் தான் செபிப்பதாகக் கூறி, திருத்தந்தை தன் மடலை நிறைவு செய்துள்ளார்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் மூத்த சகோதரர், அருள்பணி ஜார்ஜ் இராட்சிங்கர் (Georg Ratzinger) அவர்கள், ஜூலை 1, இப்புதனன்று, தன் 96வது வயதில், ஜெர்மன் நாட்டின் Regensburg நகரில் இறையடி சேர்ந்தார்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், நோயுற்றிருக்கும் தன் மூத்த சகோதரரைக் காண, ஜூன் 18ம் தேதி Regensburg நகருக்குச் சென்று, அவருடன் நான்கு நாள்கள் தங்கிவிட்டு, ஜூன் 22ம் தேதி மீண்டும் வத்திக்கானுக்குத் திரும்பினார்.

புதன் மறைக்கல்வி உரைகள், நண்பகல் மூவேளை செப உரை

மேலும், ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் கோடை விடுமுறை என்பதால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிவரும் புதன் மறைக்கல்வி உரைகள், ஜூலை 1 புதன் முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

ஆயினும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில், புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை வழங்கும் நண்பகல் மூவேளை செப உரை தொடர்ந்து இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, கோடை விடுமுறையில் உரோம் நகருக்கு வெளியே அமைந்துள்ள திருத்தந்தையரின் கோடை விடுமுறை மாளிகையான காஸ்தெல் கந்தோல்போவிற்கு ஏனைய திருத்தந்தையர் செல்லும் பழக்கத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பின்பற்றாமல், வத்திக்கானிலேயே தங்கி வருகிறார்.

இருப்பினும், தற்போதைய கொரோனா கொள்ளைநோயின் தாக்கத்தால், இந்நாள்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எவ்வித அதிகாரப்பூர்வ சந்திப்புக்களையும் மேற்கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 July 2020, 13:44