புனித பேதுரு வளாகத்தில் மூவேளை செப உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் புனித பேதுரு வளாகத்தில் மூவேளை செப உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

இறைவார்த்தையை ஏற்பது, இயேசுவையே ஏற்பதாகும்

திருத்தந்தை - நாம் விரும்பினால் நம்மை நல்ல நிலமாக்கி, உழுது, இறைவார்த்தை நல்ல பலனைத்தர, நம்மால் உதவமுடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவார்த்தையை ஏற்றுக்கொள்வது, இயேசுவையே ஏற்றுக்கொள்வதாகும் என, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு திருப்பலி வாசகத்தில் வரும், நான்கு விதமான நிலப்பகுதியில் விழுந்த விதைகளைப்பற்றி பேசும் விதைப்பவர் உவமையைக் குறித்து விளக்கமளித்த திருத்தந்தை, இறைவார்த்தையை ஏற்பது என்பது, மனித உருவெடுத்து வந்த இறைவார்த்தையாம் இயேசுவை ஏற்பதாகும் என்றார்.

இவ்வுவமையில் வரும், பாதையோரத்தில் விழுந்த விதைகள் என்பவை, .இறைவார்த்தையை நாம் இதயத்தில் பெற்றாலும், நம் கவனம் பலவேளைகளில் சிதறி, பல்வேறு கொள்கைகளால் இறைவார்த்தையை இழந்து, நம் விசுவாசத்தையே இழக்கும் ஆபத்து உள்ளதை குறித்து நிற்கின்றன என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சிறிய அளவு மண் கொண்டுள்ள பாறை மீது விழுந்த விதைகள் முளைத்தாலும், ஆழமாக வேரூன்ற முடியாததால், வாழ்வின் துன்பகரமான நேரங்களில் விசுவாசத்தை இழந்துவிடும் மனிதர்களைப்போல், சிறிது காலத்திலேயே மடிந்துவிடும் என விளக்கமளித்த திருத்தந்தை, முட்புதர் நடுவே விழுந்த விதைகள் முளைத்து எழுந்தாலும், அப்புதரால் நசுக்கப்பட்டு வளரமுடியாமல் போவதுபோல், செல்வம் மீதான பேராசையும், உலக வீண் கவலைகளும் இறைவார்த்தை நம்மில் வளர்ந்து பலன்தருவதை தடுக்கின்றன, என்று கூறினார்.

நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் முளைத்து நல்ல பலனைத் தருகின்றன, ஏனெனில், விதைகள் தன்னிலையிலேயே வீரியமுடையவை, இறைவனும் அதனை எல்லா இடங்களிலும் தூவுகிறார், அது பெறப்படும் மனிதர்களைப் பொறுத்து பலன் தருகிறது என மேலும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவார்த்தை நம் ஒவ்வொருவரையும் வந்தடைகிறது, நாம் விரும்பினால் நம்மை நல்ல நிலமாக்கி, உழுது, இறைவார்த்தை நல்ல பலனைத்தர,  நம்மால் உதவமுடியும் என தன் மூவேளை செப உரையின் இறுதியில் அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 July 2020, 13:00