திருத்தந்தை பிரான்சிஸ், மூவேளை செபஉரையின்போது - 050720 திருத்தந்தை பிரான்சிஸ், மூவேளை செபஉரையின்போது - 050720 

இறையரசின் இரகசியங்கள் எளியோருக்கே வெளிப்படுத்தப்படுகின்றன

செல்வம் படைத்தோரையும், அதிகாரத்தில் இருப்போரையுமே உயர்த்திப்பிடிக்கும் இன்றைய உலகில், மனித சமுதாயத்தை, புதிதாக கட்டியெழுப்பும் நற்செய்தியை, ஏழைகளுக்கும் எளியோருக்கும் வழங்குபவராக வருகிறார் இயேசு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
சோர்வுற்றிருப்போர், மற்றும், ஒடுக்கப்பட்டிருப்போருக்கு இறைவன் வழங்கும் ஆறுதல் என்பது, உளவியல் சார்ந்ததோ, பொருளுதவி சார்ந்ததோ அல்ல, மாறாக, நற்செய்தியைப் பெறுவதிலும் புதிய சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதிலும் கிட்டும் மகிழ்ச்சியே ஆகும் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு இஞ்ஞாயிறு திருப்பலி நற்செய்தி வாசகம் (மத். 11.25-30), குறித்து நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாள் நற்செய்தியில் காணப்படும் மூன்று விடயங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
இறையரசின் இரகசியங்களை எளியோருக்கு வெளிப்படுத்தியதற்காக தந்தையாம் இறைவனை முதலில் புகழும் இயேசு, இரண்டாவதாக, தனக்கும் தந்தைக்கும் உள்ள தனிப்பட்ட உறவை வெளிப்படுத்துகிறார், மூன்றாவதாக, நாமும் தந்தையை நாடிச்சென்று ஆறுதலைப் பெறுமாறு அழைப்பு விடுக்கிறார் என, தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்களுக்கு எல்லாம் தெரியும் என, தங்கள் இதயங்களை மூடி வைத்திருக்கும் ஞானிகளும் அறிஞர்களும் இறையரசின் இரகசியங்களை பெறமுடியாத வேளையில், இறைவனில் நம்பிக்கைக் கொண்டு தங்கள் இதயங்களை திறந்து வைத்திருக்கும் எளியோர் அந்த இரகசியங்களைப் பெறுகின்றனர், அவர்களுக்கே அவை வெளிப்படுத்தப்படுகின்றன என்றார்.
இறையன்பு, மற்றும், நற்செய்தி வழங்கும் பேறுகளின் முன்மாதிரியாக இருக்கும் இறைமகன் இயேசு, செல்வம் படைத்தோரையும் அதிகாரத்தில் இருப்போரையுமே உயர்த்திப்பிடிக்கும் இன்றைய உலகில், மனித சமுதாயத்தை, புதிதாக கட்டியெழுப்பும் நற்செய்தியை ஏழைகளுக்கும் எளியோருக்கும் வழங்குபவராக வருகிறார் என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இரக்கச் செயல்களை ஆற்றவும், ஏழைகளுக்கு நம்பிக்கையின் நற்செய்தியை வழங்கவும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் அழைக்கப்பட்டுள்ளார், அதன் வழியாக மனித சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் மகிழ்ச்சியை, ஏழை எளியோருக்கு தருவதே, இயேசு வழங்கும் ஆறுதல் எனவும் எடுத்துரைத்து, தன் மூவேளை செப உரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 July 2020, 14:11