உரோம் Santa Maria in Trastevere பெருங்கோவிலில் செபம் உரோம் Santa Maria in Trastevere பெருங்கோவிலில் செபம் 

அமெரிக்க ஐக்கிய நாட்டில் போராடுகின்றவர்களுடன் ஒருமைப்பாடு

திருஅவை நற்செய்தியின் திருச்சொற்களை முழக்கமிடும்போது, அது இயேசுவுக்கு பிரமாணிக்கமாக இருக்க விரும்புகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆப்ரிக்க-அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிளாய்ட் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில், கொலையுண்டதையடுத்து, நீதிகேட்டு போராடுகின்றவர்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.

பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவையின் தலைவரான கர்தினால் Kevin Farrell அவர்கள், ஜூன் 05, இவ்வெள்ளி இரவில், உரோம் Santa Maria in Trastevere பெருங்கோவிலில், ஃபிளாய்ட் அவர்களின் ஆன்ம சாந்திக்காக திருவழிபாடு ஒன்றை தலைமையேற்று நிறைவேற்றியபோது இவ்வாறு கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த கர்தினால் Farrell அவர்கள், அந்த திருவழிபாட்டில் மறையுரையாற்றியவேளையில், தங்கள் நாட்டின் உண்மையான கருத்தியல்கள், அதன் அரசியலமைப்பு மற்றும், அதன் சட்டங்களுக்கு, குடிமக்கள் திரும்பி வருவதற்கு, கிறிஸ்தவர்கள் உதவவேண்டிய கடமையைக் கொண்டிருக்கின்றனர் என்று கூறினார்.

கத்தோலிக்கத் திருஅவை, இனப்பாகுபாட்டு விவகாரத்திற்கு பதிலளிக்கையில், கருத்தியல்களின்படி பிரிந்து நிற்காமல், கிறிஸ்துவில் ஒன்றிணையவேண்டும் என்று வலியுறுத்திய கர்தினால் Farrell அவர்கள், திருஅவை நற்செய்தியின் திருச்சொற்களை முழக்கமிடும்போது, அது இயேசுவுக்கு பிரமாணிக்கமாக இருக்க விரும்புகிறது என்று கூறினார்.

சூறையாடுதலும், வன்முறையும் வருங்காலத்திற்கு எவ்விதத்திலும் பலனளிக்காது என்றும், இந்தக் காரணத்தினால், கிறிஸ்தவர்கள் அச்சத்தினால் மறைந்து வாழக்கூடாது என்றும் கூறிய கர்தினால் Farrell அவர்கள், சமுதாயத்தில் பதட்டநிலைகள் நிலவும் இன்னல் நிறைந்த இந்நேரத்தில், கிறிஸ்தவர்கள், அவ்விடங்களில் பிரசன்னமாக இருந்து, அனைவரின் இதயமும் ஏங்குகின்ற, உண்மை, சமத்துவம், நன்மதிப்பு, நீதி, மற்றும், நீடித்த நன்மைதரக்கூடிய விடயங்களை எடுத்துரைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மீட்பு மற்றும், இரக்கத்தின் செய்தியை, இயேசு அறிவிக்கையில், எவரையும் ஒதுக்காமல், எல்லாருக்கும் அறிவித்தார் என்று கூறிய கர்தினால் Farrell அவர்கள், நாமும், இனம், பணம், அரசியல் தொடர்பு போன்றவற்றின் அடிப்படையில் பிரித்துப் பார்க்காமல், இயேசுவின் படிப்பினைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க முன்வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

உரோம், சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த திருவழிபாட்டில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் திருப்பீடத் தூதர் Callista Gingrich, அமெரிக்க ஐக்கிய நாட்டு முன்னாள் பிரதிநிதி Newt Gingrich, பிரித்தானியாவின் திருப்பீடத் தூதர் Sally Axworthy உள்ளிட்ட பலர் பங்குபெற்று செபித்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 June 2020, 12:58