திருத்தந்தை பிரான்சிஸ்,  அமேசான் பழங்குடி மக்கள் திருத்தந்தை பிரான்சிஸ், அமேசான் பழங்குடி மக்கள் 

கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ள அமேசான் பகுதிக்காக செபம்

கோவிட்-19 கொள்ளைநோயால், அமேசான் பகுதியில், மிகவும் நலிவுற்ற பழங்குடி மக்களும் தாக்கப்பட்டுள்ளனர், மற்றும், உயிரிழந்துள்ளனர், நாம் அன்புகூரும் இந்தப் பகுதி மக்களுக்காக, அமேசான் அன்னை மரியாவின் பரிந்துரையை மன்றாடுகிறேன்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகளாவியத் திருஅவைக்கும், சமுதாயத்திற்கும், குறிப்பாக, கொரோனா கொள்ளைநோயால் மிகக் கடுமையாய்ச் சோதிக்கப்பட்டுள்ள அமேசான் பகுதிக்கும் தூய ஆவியார் சக்தியைக் கொடுக்கவேண்டும் என்று, ஜூன் 02, இச்செவ்வாயன்று, தன் டுவிட்டர் செய்திகள் வழியாக, இறைவனை மன்றாடியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“கோவிட்-19 கொள்ளைநோயால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள அமேசான் பகுதி திருஅவைக்கும், சமுதாயத்திற்கும், தூய ஆவியார் ஒளியையும், சக்தியையும் வழங்குமாறு மன்றாடுவோம். அந்த விலைமதிப்பில்லாத பகுதி மற்றும், உலகில் கடும் வறுமையில் வாழ்கின்ற மக்களுக்காக நான் இறைவேண்டல் செய்கிறேன். அவர்கள் நலவாழ்வு வசதிகளைக் குறைவின்றி பெறவேண்டும் என்பதற்காகவும் விண்ணப்பிக்கிறேன்” என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

இச்செவ்வாயன்று, திருத்தந்தை வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “தூய ஆவியாரின் ஒளியும், வல்லமையும் நமக்கு எவ்வளவு தேவைப்படுகின்றன! நற்செய்திக்குச் சான்றுபகர்வதில், எவ்விதத் தடைகளும் இன்றி, துணிவுடன் செயல்படுவதற்கு, திருஅவைக்கு, தூய ஆவியார் தேவைப்படுகிறார். முழு மனித சமுதாயமும், பிளவுபடாமல், ஒன்றிணைந்து, இப்போதைய நெருக்கடியிலிருந்து வெளிவந்து, முன்னோக்கிச் செல்வதற்கும், அவர் தேவைப்படுகிறார்” என்ற வார்த்தைகள் பதிவாகியிருந்தன.

அமேசான் பகுதிக்காக திருத்தந்தை 

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 31, பெந்தக்கோஸ்து பெருவிழாவன்று ஆற்றிய நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில், கொரோனா கொள்ளைநோயால் கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ள அமேசான் பகுதிக்காகச் செபித்தார்.

கோவிட்-19 கொள்ளைநோயால், அமேசான் பகுதியில், மிகவும் நலிவுற்ற பழங்குடி மக்களும்  தாக்கப்பட்டுள்ளனர், மற்றும், உயிரிழந்துள்ளனர், நாம் அன்புகூரும் இந்தப் பகுதி மக்களுக்காக, அமேசான் அன்னை மரியாவின் பரிந்துரையை மன்றாடுகிறேன் என்று திருத்தந்தை கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 June 2020, 13:37