திருத்தந்தை பிரான்சிஸ், இயேசுவின் திருஇதயம் திருத்தந்தை பிரான்சிஸ், இயேசுவின் திருஇதயம் 

இயேசுவின் திருஇதயத்திடம் செல்ல அஞ்சவேண்டாம்

17ம் நூற்றாண்டில், பிரான்ஸ் நாட்டில், புனித Margaret Mary Alacoque அவர்களுக்கு, இயேசுவின் திருஇதயம் பலமுறை காட்சிகொடுத்தது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இரக்கமுள்ள இயேசுவின் திருஇதயத்திடம் செல்வதற்கு அஞ்சவேண்டாம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 19, இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் செய்தி வழியாக கேட்டுக்கொண்டுள்ளார்.

“ஆண்டவர், நம்மை எப்போதும் இரக்கத்தோடு பராமரித்து வருகிறார், எனவே நாம் அவரை அணுகுவதற்கு அஞ்சாதிருப்போம், அவர் இரக்கமுள்ள இதயத்தைக் கொண்டிருக்கிறார், நம் மனக்காயங்களை, நம் மனதிலுள்ள பாவங்களை அவரிடம் காட்டினால், அவர் நம்மை எப்போதும் மன்னிப்பார், எனவே இயேசுவிடம் செல்வோம்” என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

ஜூன் 19, இவ்வெள்ளியன்று, சிறப்பிக்கப்பட்ட இயேசுவின் திருஇதய விழாவையொட்டி திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தி, இயேசுவின் திருஇதயம் #SacredHeartofJesus  என்ற ஹாஷ்டாக்குடன் பதிவாகியுள்ளது.

ஜூன் 20, இச்சனிக்கிழமை, மரியாவின் மாசற்ற திருஇதய விழாவாகும்.

இயேசுவின் திருஇதய பக்தி

17ம் நூற்றாண்டில், பிரான்ஸ் நாட்டில், புனித Margaret Mary Alacoque அவர்களுக்கு, இயேசுவின் திருஇதயம் பலமுறை காட்சிகொடுத்தது. இயேசு சபை அருள்பணி புனித Claude La Colombière அவர்கள், இப்புனிதர் கண்ட காட்சிகளை உலகறியச் செய்தார். அதன் விளைவாக, கத்தோலிக்க உலகில் இயேசுவின் திருஇதய பக்தி பரவியது.

திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், 1920ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி, புனித Margaret Mary Alacoque அவர்களை, புனிதராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதேவண்ணம், 1992ம் ஆண்டு, மே மாதம் 31ம் தேதி, திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள், Claude La Colombière அவர்களை புனிதராக உயர்த்தினார். புனித Alacoque அவர்கள், புனிதராக உயர்த்தப்பட்ட நிகழ்வின் நூற்றாண்டு விழா இவ்வாண்டு சிறப்பிக்கப்படுகின்றது.

19ம் நூற்றாண்டில் போலந்து நாட்டில் புனித Faustina Kowalska அவர்களுக்கு, இயேசுவின் திருஇதயம் காட்சிகொடுத்தது. அதன் பயனாக, 20ம் நூற்றாண்டில் இறை இரக்க பக்தி பரவியது. திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், 1956ம் ஆண்டில், இயேசுவின் இதயம் பற்றிய Haurietis aquas எனப்படும் திருமடலை வெளியிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 June 2020, 14:14