மடகாஸ்கர் திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் மடகாஸ்கர் திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் 

உலக சுற்றுச்சூழல் நாள், திருத்தந்தையின் டுவிட்டர்

இயற்கை அன்னையை நாம் பாதுகாக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, “இயற்கைக்கான நேரம்” என்ற தலைப்பில், ஜூன் 05, இவ்வெள்ளியன்று உலக சுற்றுச்சூழல் நாள் சிறப்பிக்கப்பட்டது

 

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்தும், கிறிஸ்துவின் இதயப் பண்பு குறித்தும், ஜூன் 05, இவெவள்ளியன்று தன் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

ஜூன் 05, இவ்வெள்ளியன்று, உலக சுற்றுச்சூழல் நாள் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, திருத்தந்தை வெளியிட்டுள்ள, முதல் டுவிட்டர் செய்தியில் “அனைத்துமே ஒன்றோடொன்று தொடர்கொண்டுள்ளன, வாழ்வு மீதும், இயற்கையோடுள்ள உறவுகள் மீதும், நாம் கொண்டிருக்கும் உண்மையான அக்கறை, உடன்பிறந்த உணர்வு, நீதி, மற்றவருக்குப் பிரமாணிக்கமாக இருப்பது ஆகியவற்றினின்று பிரிக்கமுடியாதது” என்ற சொற்கள் பதிவாகியுள்ளன.

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும், இறைவா உமக்கே புகழ் என்று பொருள்படும் LaudatoSi திருமடல் மற்றும், உலக சுற்றுச்சூழல் நாள் ஆகியவற்றைக் குறிக்கும் ஹாஷ்டாக்குகளுடன், தன் முதல் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையில், இவ்வாண்டு (2020) மே மாதம் 24ம் தேதியிலிருந்து, 2021ம் ஆண்டு, மே மாதம் 24ம் தேதி வரை, Laudato si' ஆண்டு சிறப்பிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. நிறுவனம்,1974ம் ஆண்டிலிருந்து, உலக சுற்றுச்சூழல் நாளைச் சிறப்பித்து வருகிறது. இயற்கை அன்னையை நாம் பாதுகாக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, “இயற்கைக்கான நேரம்” என்ற தலைப்பில், ஜூன் 05, இவ்வெள்ளியன்று உலக சுற்றுச்சூழல் நாள் சிறப்பிக்கப்பட்டது.

இயேசுவின் திருஇதயம்

இயேசுவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஜூன் மாதத்தில், அதிலும், குறிப்பாக, இந்த மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையாகிய இந்நாளில், திருத்தந்தை வெளியிட்டுள்ள, இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “கிறிஸ்துவின் இதயம் எவ்வளவு மகத்தானது என்றால், நம் அனைவரையும் அவரது கனிவின் புரட்சியில் வரவேற்பதற்கு விரும்புகிறது” என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 June 2020, 12:15