லொம்பார்தியா மாநில மருத்துவர்கள், செவிலியர் மற்றும், நலப்பணியாளர்கள் சந்திப்பு லொம்பார்தியா மாநில மருத்துவர்கள், செவிலியர் மற்றும், நலப்பணியாளர்கள் சந்திப்பு 

கோவிட்-19 நோயாளிகளைப் பராமரிக்கும் அனைவருக்கும் நன்றி

இத்தாலியில் கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் துணிவுடன் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், நலப்பணியாளர்கள் மற்றும், அருள்பணியாளர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நன்றி தெரிவித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோயின் பெருந்துன்ப காலத்தில், சிறந்த திறமையுடனும், தியாகத்துடனும் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும், செவிலியர்கள், தங்கள் நாடுகளின் தூண்களில் ஒன்றாகவும், மாபெரும் நம்பிக்கையாகவும் உள்ளனர் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கோவிட்-19 கொள்ளைநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட வட இத்தாலி பகுதியின் ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், அந்நோயாளிகளுக்குப் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், நலப்பணியாளர்கள் மற்றும், தன்னார்வலர் பிரதிநிதிகள், இன்னும், உரோம் “Spallanzani” மருத்துவமனையின் நிபுணர்கள் போன்றோரை, ஜூன் 20, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மனித சமுதாயத்தின் காணக்கூடிய அடையாளங்கள்

இத்தாலியில் சமுதாய விலகல் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டபின், திருப்பீடத்தில் முதன்முதலில் சந்தித்த குழுக்களில் ஒன்றாகிய இவர்கள் அனைவருக்கும் தன் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்கள், மனித சமுதாயத்தின் காணக்கூடிய அடையாளங்கள் மற்றும், இவர்கள், இதயங்களை வெம்மைப்படுத்துகின்றவர்கள் என்று கூறினார்.

வானதூதர்களாக...

கொள்ளைநோய் தாக்கிய காலத்தில் தங்களுக்கு ஆதரவாகவும், அந்நோயிலிருந்து குணமடையவும் உதவியதோடு, சிலநேரங்களில் தாங்கள் ஆண்டவரைச் சந்திக்கும் இறுதிநேரம்வரை தங்களோடு இருந்த மருத்துவர்கள் மற்றும், செவிலியர்களை, வானதூதர்களாக அவர்கள் நோக்கினர் என்று திருத்தந்தை கூறினார்.

நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்களை தங்களின் சொந்த கைபேசியில் அழைத்து, இறப்பதற்குமுன் அவர்களோடு பேச வைத்தது உட்பட, இந்த நலப்பணியாளர்கள், பல சிறிய மற்றும் பெரிய அடையாளங்களால், வானதூதர்களாக நோயாளிகளின் அருகில் இருந்துள்ளனர் என்றும் திருத்தந்தை பாராட்டினார். இந்த அடையாளங்கள் நம் எல்லாருக்குமே எடுத்துக்காட்டாக உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை.

நாட்டின் தூண்கள்

மிகவும் களைத்திருந்தநேரத்திலும்கூட, தன்னலமறுப்புடன் தொடர்ந்து பணியாற்றிய மருத்துவர்கள், இத்தாலி நாட்டின் தூண்களில் ஒன்றாக உள்ளனர் என்றும், அவர்கள் சேர்த்த அனைத்து நேர்மறை சக்திகளையும் கருவூலமாக காக்கவேண்டிய நேரம் இது என்றும், அவை, இப்போதைய மற்றும் வருங்கால, லொம்பார்தியா மாநிலம் மற்றும், இத்தாலிய சமுதாயத்திற்கு, மிகுந்த பலன்களைக் கொணர்ந்துள்ளன என்று கூறினார்.

கோவிட்-19 நோயாளிகளின் துன்பங்கள், இதில் உயிரிழந்தோர், குறிப்பாக, வயது முதிர்ந்தோர் ஆகியோரை நினைத்துப் பார்ப்பதாகக் கூறிய திருத்தந்தை, வயது முதிர்ந்தோரின் வாழ்வு அனுபவங்கள் மறக்கப்படக் கூடாது என்றும், அது வருங்காலத்தைக் கட்டியெழுப்ப மிகவும் அவசியம் என்றும், அதற்கு வலிமையும், அனைவரின் அர்ப்பணமும் தேவைப்படுகின்றன என்றும் கூறினார். 

மனித உடன்பிறந்தநிலை மற்றும், நல்லிணக்க வாழ்வை பேணி வளர்ப்பதற்கு, நம் மத்தியில் நெருக்கமும், அக்கறையும், தியாகமும் எவ்வளவு தேவைப்படுகின்றன என்பதை, இந்த கொள்ளைநோய் காலம் நமக்குக் கற்பித்துள்ளது என்றும் திருத்தந்தை கூறினார்.  

இந்த நெருக்கடி காலம், நாம் கூடுதலாக, ஆன்மீகத்திலும், அறநெறியிலும் வளர உதவியுள்ளது என்றும், கடவுள் நம்மைக் கைவிடவில்லை என்பதற்கு, மதநம்பிக்கையாளர்களாகிய நாம் சான்றுபகரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் இறைத்தந்தை தேவைப்படுகிறார், அவரிடம் செபிப்போம், செபமே, நம்பிக்கையின் ஆன்மா என்றும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 June 2020, 14:20