தேடுதல்

Vatican News
வத்திக்கான் நீதித்துறை தலைமை அலுவலகம் வத்திக்கான் நீதித்துறை தலைமை அலுவலகம்  

வெளிப்டையானதாக, ஊழலற்றதாக இருக்கவேண்டிய பணி ஒப்பந்தங்கள்

வத்திக்கானில் நடைமுறையில் இருக்கும் விதிகளோடு, அனைத்துலக நாடுகளின் நல்விதிகளையும் இணைத்துச் செயல்படும் வழிமுறைகளை எடுத்தியம்பும் அப்போஸ்தலிக்க ஏடு.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

வெளி அமைப்புகளுடன், திருப்பீடம் மற்றும் வத்திக்கான் நகரத்தின் பணி ஒப்பந்தங்கள், வெளிப்டையானதாகவும், நிர்வாகக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகவும், ஊழலற்றதாகவும் இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் கூடிய வழிகாட்டுதல்களுடன், அப்போஸ்தலிக்க ஏடு  ஒன்றை, இத்திங்களன்று வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Motu Proprio என்ற வடிவில், அதாவது, சுய விருப்பத்தின்பேரில் திருத்தந்தையால் வெளியிடப்பட்டுள்ள இந்த ஏடு, கடந்த நான்கு ஆண்டுகளாக வத்திக்கானின் வெவ்வேறு துறைகளால் தயாரிக்கப்பட்டு, வெளி அமைப்புகளுடன் பொது ஒப்பந்தம் போடுவது குறித்த புதிய வழிமுறைகளுடன் ஒரே ஏடாக திருத்தந்தையால் வெளியிடப்பட்டுள்ளது.

86 வெவ்வேறு பிரிவுகள் குறித்த விளக்கங்களையும், பிரச்சனைகள் எழும்போது உதவும் வகையில் 12 சட்டரீதியான பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கியதாக இந்த அப்போஸ்தலிக்க ஏடு உள்ளது.

திருப்பீடத்தின் வெவ்வேறு துறைகள் நேரடியாக பொது ஒப்பந்தங்களை வெளி நிறுவனங்களுடன் இடுவதை நீக்கி, தற்போது, ஒரே நிர்வாகத்தின் கீழ் அதனைக் கொண்டுவருவதை வலியுறுத்தும் இந்த ஏடு, ஐக்கிய நாடுகள் நிறுவனம், ஊழலுக்கு எதிராக உருவாக்கியுள்ள விதிகளை பின்பற்றி தயாரிக்கப்பட்டுள்ளது.

ஊழலுக்கு வாய்ப்பு வழங்காதிருத்தல், அடிப்படை மதிப்பீடுகளை வகுத்துச் செயல்படுதல், சுயநலப்போக்குகளை அகற்றுதல், சில ஒப்பந்த பரிந்துரைகள் ஏற்றுகொள்ளப்படாமைக்குரிய காரணங்கள் விளக்கப்படுதல், பிரிந்துகிடக்கும் பொறுப்புகளை ஒரே துறையின் கீழ் கொணர்தல், இதற்கென வத்திக்கான் பணியாளர்களைக்கொண்ட குழுவை உருவாக்குதல், உறுப்பினர்களாக இருப்பவர்கள், வெளி பணி  ஒப்பந்தங்களை வத்திக்கானில் முன்வைக்க தடைசெய்தல், வத்திக்கானில் நடைமுறையில் இருக்கும் விதிகளோடு அனைத்துலக நாடுகளின் நல்விதிகளை இணைத்துச் செயல்படுதல், என பல்வேறு  வழிமுறைகளை எடுத்தியம்புகிறது, இந்த அப்போஸ்தலிக்க ஏடு.

01 June 2020, 13:37