தேடுதல்

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை 

கொள்ளைநோய்க்குப் பலியானவர்களுடன் தோழமை

கோவிட்-19 தொற்றுக்கிருமியால், மக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர், கடந்த வெள்ளியன்று, ஒரு நாட்டில், ஒரு நிமிடத்திற்கு ஒருவர் இறந்துகொண்டிருந்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா கொள்ளைநோயால் தொடர்ந்து கடுமையாய் பாதிக்கப்பட்டுவரும் நாடுகளுக்காகச் செபித்தவேளை, ஜூன் மாதம் இயேசுவின் திருஇதயத்திற்கு  சிறப்பாக அர்ப்பணிக்கப்பட மாதம் என்பதை, ஜூன் 07, இஞ்ஞாயிறு, மூவேளை செப உரைக்குப்பின் நினைவுபடுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கோவிட்-19 கொள்ளைநோயின் கடுமையான தாக்கத்திலிருந்து, இத்தாலி நாடு மீண்டுவிட்டாலும், அக்கிருமி மேலும் தொற்றாமல் இருப்பதற்குத் தேவையான விதிமுறைகள் கவனமுடன் நடைமுறையில் உள்ளன என்று கூறிய திருத்தந்தை, அவற்றை கவனமுடன் கடைப்பிடிப்பது, அக்கிருமி மேலும் பரவாமல் தடைசெய்ய உதவும் என்று கூறினார்.

இக்கொள்ளைநோயிலிருந்து மீண்டெழுந்துவிட்டோம் என்ற வெற்றிப்பண்ணை விரைவில் இசைக்கவேண்டாம், அது குறித்து மிகுந்த கவனமுடன் இருங்கள் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இக்கிருமியால் மக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர், கடந்த வெள்ளியன்று, ஒரு நாட்டில், ஒரு நிமிடத்திற்கு ஒருவர் இறந்துகொண்டிருந்தார், இது மிகவும் கவலை தருகின்றது என்று தெரிவித்தார்.

இக்கொள்ளைநோயால் தாக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும், அவர்களைப் பராமரிப்பவர்களுடன் தன் அருகாமையையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளிப்படுத்தினார். 

இயேசுவின் திருஇதயம்

ஜூன் மாதம், இயேசுவின் திருஇதயத்திற்கு  சிறப்பாக அர்ப்பணிக்கப்பட மாதம் என்பதை நினைவுகூர்ந்த திருத்தந்தை, இயேசுவின் மனித மற்றும், இறை இயல்புகொண்ட திருஇதயம், நன்னீரின் ஊற்றாகும், இதிலிருந்து கடவுளின் இரக்கம், மன்னிப்பு மற்றும் கனிவை, நாம் எப்போதும் பருகலாம் என்று கூறினார்.  

இயேசுவின் அன்பு பிரசன்னமாக இருக்கும் திருநற்கருணையை ஆராதனை செய்வதன் வழியாக, நம் இதயம், சிறிது சிறிதாக, மிகுந்த பொறுமையுடையதாய், மனத்தாராளம் கொண்டதாய் மற்றும், அதிக இரக்கம் உள்ளதாய் மாறும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

07 June 2020, 13:00