திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

வன்முறை நிகழ்வுகள் நம்மை நாமே அழிப்பதற்கு உதவுகின்றன

மனிதவாழ்வின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கிறோம் எனக் கூறிக்கொண்டே, இனவெறியை சகித்துக்கொள்வதும், அதைக் குறித்து பாராமுகமாக இருப்பதும், ஓரினத்தை ஒதுக்கிவைப்பதும், ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் George Floyd அவர்கள் கொலையுண்டதைக் குறித்தும், அந்த மரணத்தைத் தொடர்ந்து எழுந்துள்ள பதட்ட நிலைகள் குறித்தும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதனன்று வழங்கிய மறைக்கல்வியுரைக்குப்பின், அமெரிக்க ஐக்கிய நாட்டின் சகோதர சகோதரிகளுக்கென இச்செய்தியை வழங்குவதாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Floyd அவர்களின் இந்த துயர மரணம் குறித்தும், அதனோடு தொடர்புடைய பதட்ட நிலைகள் குறித்தும் தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மனித வாழ்வின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கிறோம் எனக் கூறிக்கொண்டே, இனவெறியை சகித்துக்கொள்வதும், அதைக் குறித்து பாராமுகமாக இருப்பதும், ஓரினத்தை ஒதுக்கிவைப்பதும், ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என கூறியத் திருத்தந்தை, அதேவேளை, இந்த பதட்ட நிலைகளால் எழுந்துள்ள இழப்புகள் பெரும் கவலைத்தருவதாகவும் உள்ளது என மேலும் எடுத்துரைத்தார்.

வன்முறைகளால் எந்த பயனுமில்லை எனவும், அண்மைய வன்முறை நிகழ்வுகள் நம்மை நாம் அழிப்பதற்கு மட்டுமே உதவுகின்றன எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

George Floyd அவர்களின் ஆன்ம நிறைசாந்திக்கும், இனவெறி எனும் பாவத்திற்கு பலியானவர்களின் ஆன்ம நிறைசாந்திக்காகவும் இந்நாளில், Saint Paul, மற்றும், Minneapolis தலத்திருஅவைகளோடு சேர்ந்து செபிப்பதாக உறுதி கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இனவெறி எனும் பாவத்திற்கு பலியாகியுள்ளோரின் குடும்பங்கள், மற்றும், நண்பர்களுக்கு இறைவன் ஆறுதலை வழங்கவேண்டும் என செபிப்பதோடு, நாமனைவரும் ஏங்கும் அமைதி, மற்றும், தேசிய ஒப்புரவிற்காக இறைவனை நோக்கி வேண்டுவோம் எனவும் கேட்டுக்கொண்டார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டிலும், உலகெங்கிலும், அமைதிக்காக பணியாற்றும் அனைத்து மக்களுக்காகவும் இறைவனிடம் பரிந்துரைக்குமாறு அமெரிக்க கண்டத்தின் அன்னையாகிய குவாதலூப்பே அன்னை மரியாவிடம் விண்ணப்பிப்போம் என கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 June 2020, 11:55