மூவேளை செப உரை மூவேளை செப உரை 

நம் பாவங்களைப் பொருட்படுத்தாமல், கடவுள் நம்மை அன்புகூர்கிறார்

நாம் கடவுளைத் தேடுவதற்குமுன், அவர் நம்மை முதலில் தேடுகிறார் மற்றும் சந்திக்கிறார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தந்தை, மகன், மற்றும், தூய ஆவியார் பற்றி நாம் நினைக்கையில், அன்பையும், அன்புகூரப்பட்டுள்ளதையும், நினைத்துப் பார்க்கின்றோம் என்று, தூய்மைமிகு மூவொரு கடவுள் பெருவிழாவான ஜூன் 07, இஞ்ஞாயிறு நண்பகலில் வழங்கிய மூவேளை செப உரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், இஞ்ஞாயிறு நண்பகலில், கோவிட்-19 விதிமுறைகளுக்கு உட்பட்டு கூடியிருந்த மக்களுக்கு, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தின் (யோவா. 3,16-18) அடிப்படையில், மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள், உலகின் மீது வைத்துள்ள அன்பு பற்றி விளக்கினார்.  

நிக்கதேமுவோடு மேற்கொண்ட உரையாடலில், உலகை மீட்பதற்கு இறைத்தந்தையின் திட்டத்தை நிறைவேற்ற வந்தவர் என்று, இயேசு தன்னை வெளிப்படுத்தினார், மற்றும்,  தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு, அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார் என்று, இயேசு சொன்னார் என்றுரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் இந்த சொற்கள், தந்தை, மகன், தூய ஆவியார் ஆகிய மூவரின் செயலைச் சுட்டிக்காட்டுகின்றன என்றும், மனித சமுதாயத்தையும், உலகையும் காப்பாற்றுவதே மூவொரு கடவுளின் அன்பின் ஒரே திட்டம் என்றும் திருத்தந்தை கூறினார்.

கடவுள், நம் தவறுகள் மத்தியில் நம்மை அன்புகூர்கிறார்

இந்த உலகம், தீமை மற்றும், ஊழலால் குறிக்கப்பட்டுள்ளது, மனிதர்களாகிய நாம் பாவிகள், இந்த உலகைத் தீர்ப்பிட கடவுள் தலையிடலாம், அவர் தீமையை அழித்து, பாவிகளைக் கண்டித்து திருத்தலாம், அதற்கு மாறாக, அவர், உலகின் பாவங்கள் மத்தியில் அதனை அன்புகூர்கிறார், நாம் தவறுகள் இழைத்தாலும், அவரைவிட்டு தொலைவில் சென்றாலும்கூட, அவர் நம் அனைவரையும் அன்புகூர்கிறார் என்று திருத்தந்தை கூறினார்.

கடவுள் உலகை எவ்வளவுதூரம் அன்புகூர்கிறார் என்றால், அதை மீட்கும்பொருட்டு தம் ஒரே மகனையே அனுப்பினார், எனவே மூவொரு கடவுள் அன்பானவர், இந்த உலகில் அவர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார், உலகைக் காப்பாற்றி, புதுப்பிக்க விரும்புகிறார்  என்றும், திருத்தந்தை எடுத்துரைத்தார்.

மூவொரு கடவுள் பெருவிழா, நாம் மீண்டும் ஒருமுறை கடவுளின் அழகால் கவரப்படவும், இயேசு கிறிஸ்து வழியாக நமக்கு வழங்கப்பட்ட அவரது அன்பை தழுவிக்கொள்ளவும் அழைப்பு விடுக்கின்றது என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்

கடவுள் நம்மைச் சந்திப்பதற்கு நம்மை அனுமதிப்பதும், அவரில் நம்பிக்கை வைப்பதுமே, நம் கிறிஸ்தவ நம்பிக்கை என்று மூவேளை செப உரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் கடவுளைத் தேடுவதற்குமுன், முதலில் அவர் நம்மைத் தேடுகிறார் மற்றும், சந்திக்கிறார் என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 June 2020, 13:00