புனிதர்கள் பேதுரு, பவுல் திருவிழா மூவேளை செப உரை புனிதர்கள் பேதுரு, பவுல் திருவிழா மூவேளை செப உரை  

நம் தேவைகளுக்காக அல்ல, மாறாக, நம் தேவையே இறைவன்தான்

திருத்தந்தை : பிரச்சனைகளை மட்டுமே இறைவனிடம் ஒப்படைப்பவர்களாக நாம் வாழாமல், நம் வாழ்வையே அவரிடம் ஒப்படைப்பவர்களாக மாறவேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
நம் தேவைகளின்போது மட்டும் இறைவனை எண்ணாமல், நம் உண்மையான தேவையே இறைவன்தான் என வாழ்வை நடத்துவோம் என இத்திங்கள் மூவேளை செப உரையின்போது அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகரின் பாதுகாவலர்களான புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் திருவிழாவையொட்டி, திருப்பலி நிறைவேற்றியபின், நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுருவின் வாழ்வில் நடந்தவை, நம் வாழ்வுக்கும் ஒளியூட்டுபவைகளாக உள்ளன என்றார்.
நம்முடைய பிரச்சனைகளை மட்டுமே இறைவனிடம் ஒப்படைப்பவர்களாக நாம் வாழாமல், நம் வாழ்வையே அவரிடம் ஒப்படைப்பவர்களாக மாறவேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார் திருத்தந்தை.
முதலில் சிறையிலிருந்தபோது, திருஅவை ஒன்றிணைந்து பேதுருவுக்காக செபிக்க, இறைவனும் வானதூதரை அனுப்பி, பேதுருவை சிறையிலிருந்து விடுவித்தார், ஆனால், உரோம் நகரில் அதே பேதுரு சிறைவைக்கப்பட்டதபோது திருஅவை மக்கள் ஒன்றிணைத்து செபித்தபோதிலும், பேதுருவை விடுவிக்காதது இறைவனின் திட்டமாக இருந்தது எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
பேதுருவின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வுகளைக்காணும் நாம், நம் வாழ்விலும், இறைவன், நம்மை தீமைகளிலிருந்து விடுவித்து, நமக்கு பல்வேறு வரங்களை வழங்குவதைப் பார்க்கிறோம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்ப நேரங்களில் மட்டுமோ, அல்லது அவரின் கொடைகளை இறைஞ்சுவதற்கு மட்டுமோ, நாம் இறைவனை நாடிச்செல்லாமல், நம் வாழ்வையே ஒரு கொடையாக ஒப்படைக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார்.
வாழ்வை கொடையாக வழங்குவதே வாழ்வின் மிகப்பெரும் விடயமாக இருக்கவேண்டும் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கும், குழந்தைகள் பெற்றோர்களுக்கும், மேலும், ஒவ்வொருவரும் தங்கள் அருகில் இருப்போருக்கும் வாழ்வையே கொடையாக வழங்கவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதால் அல்ல, மாறாக, தன் வாழ்வையே இறைவனுக்காக வழங்கியதால், நமக்கு மாபெரும் எடுத்துக்காட்டாக பேதுரு விளங்குகிறார் என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேதுரு எனும் பாறை மீது திருஅவையை கட்டியெழுப்ப இறைவன் விரும்பியது, பேதுரு உறுதியானவர், நம்பிக்கைக்குரியவர் என்பதால் அல்ல, மாறாக, இயேசுவில் தன் வாழ்வை கட்டியெழுப்ப விரும்பிய பேதுரு மீது, தன் திருஅவையை கட்டியெழுப்ப இயேசு விருப்பம் கொண்டதாலேயே என்றார்.
இயேசு எனும் பெரிய பாறையின் மீது, புனித பேதுரு ஒரு கல்லாக இருந்தார் எனவும் கூறிய திருத்தந்தை, நாமும் நம் வாழ்வில் இயேசுவுக்கு கொடுத்துள்ள இடம் குறித்தும், வாழும் கடவுளின் துணைகொண்டு நம் வாழ்வை கட்டியெழுப்புகிறோமா என்பது குறித்தும் சிந்திப்போம் எனவும் கேட்டுக்கொண்டார்.
 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 June 2020, 13:35