உலக மறைபரப்புப்பணி ஞாயிறு திருப்பலியின்போது (20.10.2019) உலக மறைபரப்புப்பணி ஞாயிறு திருப்பலியின்போது (20.10.2019) 

உலக மறைபரப்பு ஞாயிறுக்கு திருத்தந்தையின் செய்தி

திருத்தந்தை : இறைவனுக்கும், நம் அயலவருக்கும் பணிபுரியவும், பரிந்துரைச் செபங்களை மேற்கொள்ளவும் அழைப்பு பெற்றுள்ளோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி சிறப்பிக்கப்படவுள்ள உலக மறைபரப்புப்பணி ஞாயிறுக்கென, இறைவாக்கினர் எசாயா நூலில் காணப்படும், “இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்” என்ற சொற்களை, தலைப்பாகக்கொண்டு, மே 31, இஞ்ஞாயிறன்று, செய்தியொன்றை வெளியிட்டுள்ளார், திருத்தத்தை பிரான்சிஸ்.

தொற்றுநோயின் இந்த நெருக்கடியான வேளைகளிலும், இறைவன் நம்மைப் பார்த்து, 'யாரை அனுப்புவேன்' எனக் கேட்பதும், வாழ்விற்கான நம் ஏக்கமும், தீமையிலிருந்து விடுதலை பெறுவதற்குரிய நம் முயற்சியும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்று, தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதன் காரணமாகவே, இறைவனுக்கும், நம் அயலவருக்கும் பணிபுரியவும், பரிந்துரைச் செபங்களை மேற்கொள்ளவும் அழைப்பு பெற்றுள்ளோம் என அதில் தெரிவித்துள்ளார்.

தான் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட  பணிநோக்கத்தை, சிலுவையில் இறந்தபோது முழுமையாக நிறைவேற்றிய இயேசுவைப்போல், நாமும் நம்மையே பிறருக்குக் கையளிக்கும்போது, நம் அழைப்பை நிறைவேற்றுகிறோம் என்று தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, திருஅவைக்குள் இறைவனின் மகன்களாக, மகள்களாக இருந்துகொண்டே, இறைத்தந்தையின் மறைப்பணியாளர்களாக உள்ளோம் எனவும் அதில் கூறியுள்ளார்.

வரலாற்றில் இயேசுவின் பணியை தொடர்ந்து ஆற்றிக்கொண்டிருக்கும் திருஅவை, திருமுழுக்குப்பெற்ற ஒவ்வொருவரையும் மறைப்பணியாளர்களாக தன் பெயரால் அனுப்பிவருகிறது என தன் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்திக்கு நாம் சான்றாக இருந்து, அதனை அறிவிக்கும்போது, இதயங்களையும், சமுதாயங்களையும், கலாச்சாரங்களையும், எல்லா இடங்களிலும், எல்லா நேரத்திலும் இறைவன் புதுப்பித்து மாற்றுகிறார், என மேலும் கூறியுளார்.

மறைப்பணிக்கு முழுமனத்துடனும், சுதந்திரமாகவும் நாம் பதிலளிக்கும்போது, திருஅவையில் குடியிருக்கும் இயேசுவோடு நாம் அன்புடன் கூடிய உறவில் நுழைவது மட்டுமல்ல, தூய ஆவியாரையும் வரவேற்க நம்மை தயாரிக்கிறோம், என கூறும் திருத்தந்தையின் செய்தி, மறைப்பணியாற்றுவதற்குரிய அழைப்பு அனைவருக்கும் விடப்படுகின்றது என உரைக்கின்றது.

இன்றைய தொற்றுநோய் நெருக்கடியால், மக்கள் தனிமையிலிருக்கும் சூழல்களும், வேலைவாய்ப்புக்களை இழந்தும், சமூக இடைவெளி கட்டாயத்தால் தனிமைப்படுத்தப்படும் நிலைகளும் இருக்கும்போது, மற்றவர்களின் தேவைகள் குறித்து நாம் அதிகம் அதிகமாக தெரிய வந்துள்ளோம் என்பதையும், எவ்வளவு தூரம் ஏழை மக்கள் தொடர்ந்து துன்பங்களை அனுபவித்து வந்துள்ளார்கள் என்பதையும் இந்த நெருக்கடி நமக்கு தெளிவாகக்காட்டியுள்ளது என திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.

யாரை நான் அனுப்புவேன் என இறைவன் கேட்பதாக எசாயா நூலில் நாம் காண்பதும், அதற்கு, நானிருக்கிறேன், அடியேனை அனுப்பும் (எசாயா 6:8) என்ற பதிலுரையும், நமக்கென வழங்கப்பட்டவை என்பதை எடுத்துரைக்கும் திருத்தந்தை, மறைபரப்புப்பணி ஞாயிறு, நம் செபம், தியானம், மற்றும் திருஅவைப்பணிகளுக்கு நம் பொருளுதவிகள் போன்றவை வழியே, நம் அர்ப்பணத்தை உறுதிப்படுத்தும் நாளாக இருக்கும் என்பதையும், அந்நாளில் திரட்டப்படும் பணம், உலகம் முழுவதும் உள்ள திருஅவைகளின் ஆன்மீக மற்றும் பொருள் தேவைகளுக்கு என பயன்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 June 2020, 13:10