திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

கத்தோலிக்க ஊடகவியலாளர் கருத்தரங்கிற்கு திருத்தந்தை செய்தி

மனிதக் குடும்பத்தின் முகத்தை உருவிழக்கச் செய்துள்ள இனப்பாகுபாடு, அநீதி, புறக்கணிப்பு போன்றவை களையப்படுவதற்கு, தூய ஆவியாரின் உதவியுடன், சிறப்பாக உழைக்க இயலும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்த உலகம் போர்களையும், பிரிவினைகளையும் காணும் இடங்களில், கத்தோலிக்க ஊடகவியலாளர்கள், துன்பம் மற்றும், வறுமையைக் காணுமாறும், இரக்கம், புரிந்துணர்வு தேவைப்படும் நம் சகோதரர், சகோதரிகளின் சார்பில் குரல் கொடுக்குமாறும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் Portland உயர்மறைமாவட்டத்திலுள்ள Oregon நகரில், ஜூன் 30, இச்செவ்வாயன்று துவங்கியுள்ள, இணையதள கத்தோலிக்க ஊடகவியலாளர் கருத்தரங்கிற்கு செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் உலகில் ஒப்புரவும், அமைதியும் நிலவ, ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வோம் என்று கூறியுள்ளார்.

தற்போதைய கோவிட்-19 கொள்ளைநோய் காரணமாக, கத்தோலிக்க ஊடகவியலாளர் கழகத்தின் வரலாற்றில், இக்கருத்தரங்கு, முதன்முறையாக, இணையதளம் வழியே நடைபெறுகின்றது என்பதைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இக்கொள்ளைநோயால் தாக்கப்பட்டிருப்பவர்கள், மற்றும், தங்கள் உயிரையும் பணயம் வைத்து, தேவையில் இருப்பவர்களுக்கு உதவும் அனைவரோடும் தன் அருகாமையைத் தெரிவித்துள்ளார்.

“விலகியிருக்கும் அதேவேளை ஒன்றிணைந்து” என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு நடைபெறுகின்றது என்றும், தற்போதைய கொள்ளைநோய், கடந்த சில மாதங்களாக நம்மில் உருவாக்கியுள்ள அனுபவம், மக்களை ஒன்றிணைக்க, ஊடகவியலாளரின் பணி எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துரைத்துள்ளது என்றும் திருத்தந்தை, தன் செய்தியில் கூறியுள்ளார்.

“பன்மைத்தன்மையில் ஒற்றுமை” என்ற அமெரிக்க ஐக்கிய நாட்டின் இலக்கு, ஊடகவியலாளர்கள், பொதுநலனுக்குச் ஆற்றும் சேவைக்குத் தூண்டுதலாக உள்ளது என்றும் கூறியுள்ள திருத்தந்தை, தனிநபர்களுக்கும், குழுமங்களுக்கும் இடையே உண்மையான உரையாடலையும், தொடர்புகளையும் தடைசெய்யும்வண்ணம் எழுப்பப்பட்டுள்ள, காணக்கூடிய மற்றும், காணஇயலாத சுவர்களைத் தகர்ப்பதற்கு, திறமையுள்ள ஊடகவியலாளர் தேவைப்படுகின்றனர் என்று கூறினார்.

பாலங்களை எழுப்பவும், வாழ்வைப் பாதுகாக்கவும் உழைக்கும் ஊடகவியலாளர் அவசியம் என்பதை வலியுறுத்தியத் திருத்தந்தை, தீமையிலிருந்து நன்மையைப் பிரித்துப்பார்க்கவும், உண்மையான நிகழ்வுகளை, தெளிவாகவும், பாரபட்சமின்றியும் பகுத்துப் பார்க்கும் திறனை வளர்க்கவும், மக்களுக்கு, குறிப்பாக, இளைஞர்களுக்கு உதவக்கூடிய ஊடகங்கள் தேவைப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.

கத்தோலிக்க ஊடகவியலாளர்கள் மத்தியில் ஒன்றிப்பு நிலவவும், அவர்கள் ஒற்றுமையின் அடையாளமாக விளங்கவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூகத்தொடர்பு என்பது, ஊடகவியலாளரின் தொழில்சார்ந்த திறமையை மட்டும் சார்ந்தது அல்ல, மாறாக, அவர்கள், முழுமனித சமுதாயத்தில், அனைத்து நிலைகளிலுள்ள ஒவ்வொருவரின் நலனில் அக்கறை காட்டுவதற்கு உண்மையாகவே அர்ப்பணிப்பவர்களாகவும் இருக்கவேண்டும் என்று கூறினார்.

இந்த கருத்தரங்கில் பங்குகொள்பவர்கள் அனைவர் மீதும் தூய ஆவியாரின் வரங்கள் பொழியப்பட செபிப்பதாகத் தெரிவித்தத் திருத்தந்தை, மனிதக் குடும்பத்தின் முகத்தை உருவிழக்கச் செய்துள்ள இனப்பாகுபாடு, அநீதி, புறக்கணிப்பு போன்றவை களையப்படுவதற்கு, தூய ஆவியாரின் உதவியுடன், சிறப்பாக உழைக்க இயலும் என்று, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இச்செவ்வாயன்று துவங்கியுள்ள இந்த இணையதள கருத்தரங்கு, ஜூலை 2, வருகிற வியாழனன்று நிறைவடையும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 June 2020, 12:05