“ஏழைகளுக்கு உதவிசெய்ய உன் கரத்தைத் தாராளமாய் நீட்டு” (சீராக் 7,32) “ஏழைகளுக்கு உதவிசெய்ய உன் கரத்தைத் தாராளமாய் நீட்டு” (சீராக் 7,32)  

திருத்தந்தை: வறியோருக்கு உதவ கரங்களை நீட்டுங்கள்

நாம் ஆண்டவருக்குச் செலுத்தும் வழிபாடு ஏற்புடையதாய் இருக்கவேண்டுமெனில், ஒவ்வொரு மனிதரையும், கடும் ஏழ்மையில் வாழ்வோரையும், கடவுளின் சாயலில் உருவாக்கப்பட்டவர்கள் என்று ஏற்கவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நம் அனைத்துச் செயல்களின் முடிவு, அன்பு மட்டுமே, இதுவே நம் பயணத்தின் இறுதி இலக்கு மற்றும், இதிலிருந்து எதுவும் நம் கவனத்தை திசை திருப்பக் கூடாது என்றும், இந்த அன்பு, பகிர்வு, அர்ப்பணிப்பு, மற்றும் பணியில் வெளிப்படுவதாகும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 13, இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.

“ஏழைகளுக்குத் தாராளமாய்க் கொடு” (சீராக்.7:32) என்ற சீராக்கின் ஞானம் நூலின் அறிவுரையை மையப்படுத்தி, நான்காவது வறியோர் உலக நாள் செய்தியை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “நீ செய்யும் எல்லாவற்றிலும் உன் முடிவை நினைவில் கொள்” (சீரா.7:36) என்ற சொற்களை நினைவுபடுத்தியுள்ளார்.

நம் வாழ்வு, இன்றோ, நாளையோ முடிவுக்கு வரும் என்ற சிந்தனை, நம்மைவிட ஏழைகள் அல்லது, வாய்ப்புக்களைக் குறைவாகப் பெறுகின்றவர்கள் மீது அக்கறையாய் இருப்பதற்கும், நம் எல்லாருக்கும் இருக்கின்ற ஒரு முடிவு அல்லது, ஓர் இலக்கை நோக்கிச் நம் வாழ்வை இட்டுச்செல்வதற்கும் உதவுகின்றது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

நாம் முதலில் அன்புகூரப்பட்டுள்ளோம் மற்றும் அன்புகூர தூண்டப்படுகிறோம் என்ற உணர்விலிருந்து, பகிர்வும், அர்ப்பணிப்பும், சேவையும் வெளிப்படுகின்றன என்றும், ஏழைகளோடு நாம் பகிர்ந்துகொள்ளும் ஒரு புன்னகைகூட, அன்பின் ஊற்றாகவும், அன்பைப் பரப்பும் முறையாகவும் உள்ளது என்றும் திருத்தந்தை, அச்செய்தியில் கூறியுள்ளார்.

ஏழைகளை நோக்கி நீட்டப்படும் கரங்கள் எப்போதும், ஆரவாரமின்றி உதவி வழங்குவோரின் புன்னகையால் வளமையடைகின்றன என்றும், இது, கிறிஸ்துவின் சீடர்களாக வாழ்வதில் கிடைக்கும் மகிழ்வால் மட்டுமே இயலும் என்றும் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு நாளும் ஏழைகளைச் சந்திக்கும் பயணத்தில், ஏழைகளின் அன்னையாகிய இறைவனின் அன்னை, நம்மோடு எப்போதும் இருக்கின்றார் என்றும் கூறியுள்ளார்.

ஏழைகளுக்கு உதவி

“ஏழைகளுக்கு உதவிசெய்ய உன் கரத்தைத் தாராளமாய் நீட்டு” (சீராக் 7,32) என்றுரைக்கும் சீராக்கின் ஞானம் என்ற நூலின் கூற்றுக்களை தன் செய்தியில் விரிவாக விளக்கியுள்ள    திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நூலின் முதல் பக்கங்களிலேயே, இதன் ஆசிரியர் வழங்கியுள்ள வாழ்வின் பல சூழ்நிலைகள் பற்றிய தெளிவான ஆலோசனைகளில் ஏழ்மையும் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்வின் கடினமான சூழலிலும், ஆண்டவர் மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்கவேண்டும் என்று, சீராக்கின் ஞானம் நூலின் ஆசிரியர் அறிவுறுத்துகிறார் என்றுரைத்துள்ள திருத்தந்தை, ஏழைகளுக்கு உதவுவதற்கு நம் கரங்களை நீட்டுகையில், வாழ்வில் முக்கியமானவை மீது, நம் கவனத்தைச் செலுத்தவும், புறக்கணிப்பின் தடைகளை மேற்கொள்ளவும் உதவுகின்றது என்று கூறியுள்ளார்.

துன்புறுவோருடன் தோழமையுணர்வு

இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும், நம்மைப் படைத்த கடவுளோடு நாம் எவ்வாறு நெருங்கிய உறவு கொண்டிருக்கவேண்டும் என்று ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது என்றும், கடவுளிடம் செபிப்பதும், ஏழைகள் மற்றும் துன்புறுவோருடன் தோழமையுணர்வு கொள்வதும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவை என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, நாம் ஆண்டவருக்குச் செலுத்தும் வழிபாடு ஏற்புடையதாய் இருக்கவேண்டுமெனில், ஒவ்வொரு மனிதரையும், கடும் ஏழ்மையில் வாழ்வோரையும் கடவுளின் சாயலில் உருவாக்கப்பட்டவர்கள் என்று அங்கீகரிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

இத்தகைய பழங்காலப் போதனைகள், இப்போதைய நம் காலத்திற்கும், நமக்கும், ஏற்றதாய் உள்ளன என்றும், காலம், நேரம், மதங்கள் மற்றும், கலாச்சாரத்தையெல்லாம் கடந்தது இறைவார்த்தை என்றும் கூறியுள்ள திருத்தந்தை, பலவீனர்களை ஆதரித்து, மனவேதனை அடைவோருக்கு ஆறுதலளித்து, அவர்களின் துன்பங்கள் அகலவும், மனிதமாண்பைக் காக்கவும் உதவுவது, மனித வாழ்வை முழுமையாய் வாழ்வதற்கு ஒரு வரையறை என்றும் கூறினார்.

ஏழைகளின் பல்வேறு தேவைகளைக் கண்முன்கொண்டு, அவர்கள் மீது அக்கறை காட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் தீர்மானம், தனிப்பட்ட நலன் அல்லது, கிடைக்கும் நேரம் போன்றவற்றால் வரையறுக்கப்படக் கூடாது என்றுரைத்த திருத்தந்தை, ஏழைகளையும், தேவையில் இருப்போரையும் சந்திப்பது, நமக்குத் தொடர்ந்து சவாலாக உள்ளது மற்றும், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது என்று கூறினார்.

ஏழைகள் மற்றும், தேவையில் இருப்போரின் விளிம்புநிலை வாழ்வு மற்றும், அவர்களின் துன்பங்களை அகற்ற, அல்லது அவற்றைக் குறைப்பதற்கும், அவர்களின் ஆன்மீகத் தேவைகளுக்கு உதவுவதற்கும் கிறிஸ்தவ சமுதாயம் அழைக்கப்பட்டுள்ளது என்றுரைத்த திருத்தந்தை, ஏழைகளுக்கு உதவுவதற்கு, முதலில் நாமே நற்செய்திகூரும் ஏழ்மை அனுபவத்தை வாழ்ந்திருக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கரங்களை நீட்டுவதற்கு திறன்

இன்றைய உலகில் ஒவ்வ1ரு நாளும் எத்தனையோ கரங்கள் நீட்டப்படுவதைப் பார்த்து வருகிறோம், நீட்டப்பட்ட கரம், அருகாமை, தோழமை மற்றும், அன்பின் அடையாளமாக உள்ளது, கடந்த சில மாதங்களாக இந்த உலகைப் பாதித்துள்ள கொரோனா தொற்றுக்கிருமி நோயாளிகளுக்கு, எத்தனையோ மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தகப் பணியாளர்கள், நிர்வாகிகள், மற்றும், தன்னார்வலர்கள், தங்கள் கரங்களை நீட்டியுள்ளனர் என்று, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை.

இந்த கொள்ளைநோய் திடீரென உலகைத் தொற்றியுள்ளது, தயாரில்லாத நிலைக்குள் நம்மை இட்டுச்சென்றது, இருந்தபோதிலும், ஏழைகளுக்கு நீட்டும் கரங்கள் ஒருபோதும் நிறுத்தப்படவில்லை என்று கூறியுள்ள திருத்தந்தை, தற்போதைய நெருக்கடிநிலை, நமக்குப் பல வழிகளில் சவாலாக உள்ளது, நமது பொருளாதார மற்றும், ஆன்மீக வளங்கள் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளன, நாம் அச்சத்தை அனுபவிக்கிறோம் என்று கூறியுள்ளார்.

நம் வீடுகளில் நிலவும் அமைதி, எளிமையின் முக்கியத்துவம் மற்றும், இன்றியமையாதவைகளில் நம் கவனத்தைத் திருப்பியுள்ளது, மனித உடன்பிறந்தநிலை, ஒருவர் ஒருவரை மதித்தல் மற்றும் உதவுவதல் எந்தளவுக்குத் தேவைப்படுகின்றன என்பதையும், அது உணரவைத்துள்ளது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

இந்த நான்காவது உலக வறியோர் நாளின் கருப்பொருள், நமக்குப் பல பொறுப்புகள் மற்றும் அர்ப்பணத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது என்றும், ஏழைகளை நோக்கி நம் உதவிக்கரங்களை நீட்டுகையில், அது, தம் கரங்களை சட்டைப் பைக்குள் வைப்பதை விரும்புவோரின் மனநிலைக்குச் சவால் விடுகின்றது என்றும், சில கரங்கள்,   ஆயுதங்களை விற்று பணத்தைச் சேமிக்கின்றன, மேலும் சில கரங்கள், செல்வராயும், ஆடம்பரத்திலும் வளருவதற்கும், ஊழல்முறையில் இலாபம் தேடுவதற்கும் சப்தமின்றி இலஞ்சம் கொடுக்கின்றன என்றும் திருத்தந்தை குறை கூறியுள்ளார்.     

மரணங்களை விதைக்கும் இந்தக் கரங்கள், உலகம் அனைத்திற்கும், நீதி மற்றும், அமைதியின் கருவிகளாக மாறாதவரை, நாம் மகிழ்வாக இருக்க இயலாது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.  

ஆண்டின் பொதுக்காலம், 33ம் ஞாயிறாகிய, வருகிற நவம்பர் 15ம் தேதியன்று சிறப்பிக்கப்படும் நான்காவது வறியோர் உலக நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய செய்தி, புனித பதுவை அந்தோனியார் திருவிழாவாகிய ஜூன் 13, இச்சனிக்கிழமையன்று செய்தியாளர்களுக்கு வெளியிடப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 June 2020, 15:22