லூர்து நகர்  லூர்து நகர்  

அன்னை மரியாவிடம் உலகை அர்ப்பணிப்போம்

உலகிலுள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், குறிப்பாக, உலகெங்கிலும் அமைந்துள்ள நாற்பது அன்னை மரியா திருத்தலங்களில் கூடியிருக்கும் பக்தர்கள் திருத்தந்தையோடு இணைந்து செபிக்கிறார்கள்

மேரி தெரேசா:  வத்திக்கான் செய்திகள்

உலகில் கொரோனா தொற்றுக்கிருமி முற்றிலும் ஒழியும்படியாக, மே 30, இச்சனிக்கிழமை உரோம் நேரம் மாலை 5.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்துகின்ற செபமாலை பக்திமுயற்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.

இந்நிகழ்வில், உலகிலுள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், குறிப்பாக, உலகெங்கிலும் அமைந்துள்ள நாற்பது அன்னை மரியா திருத்தலங்களில் கூடியிருக்கும் பக்தர்கள் திருத்தந்தையோடு இணைந்து செபிக்கிறார்கள் என்று, புதியவழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவையின் தலைவர் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா அவர்கள் கூறியுள்ளார்.

இவ்வாறு வத்திக்கான் செய்தித்துறையிடம் அறிவித்த, பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள், பிரான்ஸ் நாட்டு லூர்து அன்னை திருத்தலம், போர்த்துக்கல் நாட்டு பாத்திமா அன்னை திருத்தலம், போலந்து நாட்டு செஸ்ட்டகோவா திருத்தலம், மெக்சிகோ நாட்டு குவாதலூப்பே அன்னை திருத்தலம், பிரேசில் நாட்டு Aparecida அன்னை மரியா திருத்தலம், இத்தாலியின் லொரேத்தோ அன்னை திருத்தலம், இன்னும், அமெரிக்க ஐக்கிய நாடு, இஸ்பெயின், கொரியா உட்பட 40 அன்னை மரியா திருத்தலங்களில் பக்தர்கள் கூடியிருந்து திருத்தந்தையோடு இணைந்து செபிப்பார்கள் என்றும் அறிவித்தார்.

கொரோனா கிருமி தொற்றியதால், இன்று உலகில் ஏறத்தாழ அறுபது இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும், மூன்று இலட்சத்து அறுபதாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று, பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள் கூறினார்.

தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா

மேலும், மே 31, ஞாயிறன்று, உரோம் நேரம் காலை பத்து மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெந்தக்கோஸ்து பெருவிழா திருப்பலியை நிறைவேற்றுவார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவிலில், விசுவாசிகளின் பங்கேற்பின்றி இத்திருப்பலியை நிறைவேற்றியபின், வத்திக்கான் பாப்பிறை இல்லத்தின் மேல்மாடி சன்னல் வழியாக, அல்லேலூயா வாழ்த்தொலி உரையும் வழங்குவார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோவிட்-19 விதிமுறைகளால், கடந்த மார்ச் மாதம் பாதியிலிருந்து, புதன் மறைக்கல்வியுரை மற்றும், ஞாயிறு நண்பகல் செப உரைகளை, வத்திக்கான் பாப்பிறை இல்லத்தின் நூலகத்திலிருந்து வழங்கி வந்தார் என்பதும், அவை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கன

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 May 2020, 13:43