பானமா உலக இளையோர் தினம் (21 ஜனவரி 2019) பானமா உலக இளையோர் தினம் (21 ஜனவரி 2019) 

மகிழ்ச்சியை மற்றவர்களுக்கு வழங்குவது, படைப்பாற்றல் மிக்க பண்பு

திருத்தந்தை : கால்களால் ஒன்றிணைந்து ஓடமுடியாத இன்றையச் சூழலில், இதயங்களால் ஒன்றிணைந்து ஓடுவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
ஒவ்வொருவரும், தங்களால் இயன்றதை, சமுதாயத்திற்கு ஆற்றிவருவதுபோல், விளையாட்டுத் துறையினரும், அத்துறையின் வழி அழகையும் பல்வேறு வாய்ப்புகளையும் வழங்கி வருகின்றனர் என, இப்புதனன்று, தன்னைச் சந்தித்த இளையோரிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
'ஒன்றிணைந்து ஓடுகிறோம்' என்ற தலைப்பில் இவ்வாரம் இடம்பெறுவதாக இருந்து, கோவிட்-19 தொற்று நோய் காரணமாக தள்ளிப்போடப்பட்டுள்ள நிகழ்வில் கலந்துகொள்ளவிருந்த இளம் விளையாட்டு விரைகளை இப்புதனன்று காலை மறைக்கல்வியுரைக்குப்பின், தன் நூலக அறையில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மகிழ்ச்சியை மற்றவர்களுக்கு வழங்குவது என்பது, படைப்பாற்றல் மிக்க நல்ல மனித பண்பு, என்றார்.
இக்குழுவில் இணைந்திருக்கும் சிறார் ஒன்றிணைந்து ஒரே குழுவாக ஒரு நோக்கத்தை முன்வைத்து ஓடுவார்களே தவிர, அவர்களுக்குள் போட்டி மனப்பான்மைகள் இல்லை என்ற மகிழ்ச்சியையும் வெளியிட்டார் திருத்தந்தை.
இயேசு உயிர்த்த நாளில் அவரின் கல்லறையை நோக்கி இளைஞரான யோவானும், வயதான பேதுருவும் ஒடி, இளைஞர் முதலில் அதைச் சென்றடைந்தாலும், கல்லறைக்குள் நுழைவதற்கு முன்னர், யோவான் பேதுருவுக்காக காத்திருந்ததை தன் உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்திய காலத்தில் நடைமுறையில் இருந்த ஒரு சட்டமான, திருப்பயணிகள் குழுவிலுள்ள உடல் நலிவுற்றோரின் வேகத்திற்கு இயைந்த வகையில் குழுவினரின் வேகம் நிர்ணயிக்கப்பட்டிருந்ததையும் சுட்டிக்காட்டினார்.
ஒலிம்பிக் வீரர்களுடன், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள், புலம்பெயர்ந்தோர், அகதிகள், சிறைக்கைதிகள் ஆகியோர் ஒன்றிணைந்து ஓடுவதாக திட்டமிடப்பட்டிருந்த இந்த ஓட்டம், பல்வேறு கலாசாரங்களும், மதங்களும் ஒன்றிணைந்து, நட்பு, ஒருமைப்பாடு, கல்வி, ஒன்றிப்பு ஆகியவற்றை வலியுறுத்தும், அமைதியின் பாலமாக இருந்திருக்கும் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கால்களால் ஒன்றிணைந்து ஓடமுடியாத இன்றையச் சூழலில், இதயங்களால் ஒன்றிணைந்து ஓடுவோம் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை, பல விளையாட்டு வீரர்கள் நன்கொடையாக, அதாவது, பிறரன்பின் வெளிப்பாடாக வழங்கிய பல பொருட்கள் விற்பனைச் செய்யப்பட்டு, இத்தாலியின் பெர்கமோவில், கோவிட்-19 நோயாளிகளைப் பராமரிக்கும், 'திருத்தந்தை 23ம் ஜான்' மருத்துவமனைக்கு வழங்கப்பட உள்ளது குறித்து தன் மகிழ்ச்சியையும் பாராட்டையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
'ஒன்றிணைந்து ஓடுகிறோம்' என்ற இந்த நிகழ்வுக்கு, வத்திக்கானின் விளையாட்டு கழகமும், இத்தாலியின் சில விளையாட்டு குழுக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக குழுவினர்களைச் சந்திக்காத திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “We Run Together – Simul Currebant” என்ற குழுவினரை மே 20 புதனன்று முதன்முதலாக சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 May 2020, 13:31