தேடுதல்

அன்னை மரியாவின் திரு உருவத்திற்கு முன் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அன்னை மரியாவின் திரு உருவத்திற்கு முன் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

அன்னை மரியாவிடம் சக்தி வாய்ந்த ஒரு வேண்டுதல்

அன்னை மரியாவை நோக்கி சிறப்பான வேண்டுதல்களை, மே மாதம் 8ம் தேதி, வருகிற வெள்ளியன்று மேற்கொள்ளுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களிடம் கேட்டுக்கொண்டார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாம் வாழும் இந்த கடினமான நேரத்திலிருந்து இவ்வுலகைக் காத்தருள, தன் திருமகனிடம் பரிந்துரைக்குமாறு, அன்னை மரியாவை நோக்கி சிறப்பான வேண்டுதல்களை, மே மாதம் 8ம் தேதி, வருகிற வெள்ளியன்று மேற்கொள்ளுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் வழங்கிய புதன் மறைக்கல்வி உரையில் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஆர்ஜென்டீனா நாட்டின் பாதுகாவலரான லுஹான் (Luján) அன்னை மரியாவின் திருநாளாக சிறப்பிக்கப்படும் மே 8ம் தேதியன்று, இத்தாலியின் போம்பெய் நகரில் வணங்கப்படும் செபமாலை அன்னை மரியாவிடம், சக்தி வாய்ந்த ஒரு வேண்டுதல், செபமாலை வழியே மேற்கொள்ளப்படும் என்பதையும், திருத்தந்தை, தன் புதன் மறைக்கல்வி உரையில் கூறினார்.

அன்னை மரியாவுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த மே மாதத்தில், அனைவரும் இணைந்து செபமாலை செபிக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏற்கனவே விடுத்திருந்த அழைப்பை மீண்டும் நினைவுறுத்தி, இன்றைய உலகிற்கு தேவையான பாதுகாப்பை, அன்னை மரியாவின் பரிந்துரை வழியே நாம் பெறுவோமாக, என்று கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும், மே மாதம் 8ம் தேதியும், அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிறன்றும் போம்பெய் நகரில் உள்ள செபமாலை அன்னை மரியா திருத்தலத்தில் சிறப்பான செபமாலை பக்தி முயற்சிகளும், வழிபாடுகளும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மே 08, வருகிற வெள்ளியன்று சிறப்பிக்கப்படும் லுஹான் அன்னை மரியா விழாவுக்கென, Mercedes-Luján உயர்மறைமாவட்ட பேராயர் Jorge Scheinig அவர்களுக்கு மே 04, இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 May 2020, 14:17