முன்னாள் திருத்தந்தையர்கள் 16ம் பெனடிக்ட்டும் இரண்டாம் ஜான் பால் அவர்களும் முன்னாள் திருத்தந்தையர்கள் 16ம் பெனடிக்ட்டும் இரண்டாம் ஜான் பால் அவர்களும்  

உலக அமைதிக்காக பரிந்துரைக்கும் புனிதத் திருத்தந்தை

திருத்தந்தை : மக்கள் நலனிற்கு முக்கியத்துவம் கொடுத்து முன்வைக்கப்பட்டுள்ள சட்ட விதிகள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் -வத்திக்கான் செய்திகள்

புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் பிறந்ததன் 100ம் ஆண்டு நிறைவு இத்திங்களன்று சிறப்பிக்கப்படும் வேளையில், அத்திருத்தந்தையை அன்போடும், நன்றியோடும் நினைவுகூர்வோம் என அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில் இவ்வழைப்பை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்கள் காலையில், இப்புனித திருத்தந்தையின் கல்லறையின் மேல் அமைக்கப்பட்டுள்ள பீடத்திலிருந்து, தான் திருப்பலி நிறைவேற்றி உலக மக்களுக்கு தொலைக்காட்சி வழியே வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

வானுலகில் இருந்துகொண்டு இத்திருத்தந்தை, நம் அனைவருக்காகவும், இவ்வுலக அமைதிக்காகவும் பரிந்துரைத்துக் கொண்டிருப்பார் என்ற நம்பிக்கையையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார்.

சில நாடுகளில் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் துவக்கப்பட அனுமதிக்கப்பட்டுள்ளதையும், இத்தாலியில், இத்திங்கள் முதல், திருவழிபாடுகள், மக்கள் பங்கேற்புடன் இடம்பெறும் என்பதையும் தெரிவித்து மகிழ்ச்சியை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள் நலனிற்கு முக்கியத்துவம் கொடுத்து முன்வைக்கப்பட்டுள்ள சட்ட விதிகள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் மக்களிடம் விடுத்தார்.

வழக்கமாக மே மாதத்தில் இளஞ்சிறார்கள் புதுநன்மை பெறும் கொண்டாட்டங்கள் இடம்பெறும் என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போதையத் தொற்றுநோய் நெருக்கடியால் இக்கொண்டாட்டங்கள் தள்ளிப்போடப்பட்டுள்ள நிலையில், இந்த காலதாமதத்தை, சிறார்கள் இயேசுவைக் குறித்து மேலும் அறிவதற்கும், நன்மைத்தனத்தில் வளர்வதற்கும், பிறருக்கு சேவை புரிவதில் தங்களை வளர்க்கவும் பயன்படுத்துவார்களாக, என கேட்டுக்கொண்டார்.

Laudato Si என்ற ஏடு  வெளியிடப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நினைவு கொண்டாடப்பட்டு வரும் இக்காலக்கட்டத்தில், இந்த ஞாயிறு துவங்கி, வரும் ஞாயிறு வரை இடம்பெறும் Laudato Si வாரத்தை சிறப்பித்து, பொது இல்லமாகிய இவ்வுலகின் மீது நம் அக்கறையை வெளிப்படுத்துவோம் எனவும், அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 May 2020, 13:45