அல்லேலூயா வாழ்த்தொலியுரையின்போது ஆசீர் வழங்கிய திருத்தந்தை - 100520 அல்லேலூயா வாழ்த்தொலியுரையின்போது ஆசீர் வழங்கிய திருத்தந்தை - 100520 

ஒன்றிப்பு மற்றும் இணக்க உணர்வுடன் செயல்பட அழைப்பு

திருத்தந்தை : ஐரோப்பிய ஒன்றிய அவையில் பொறுப்பிலுள்ளோர், இவ்வவையின் வரலாற்று ஏடுகளால் தூண்டப்பட்டவர்களாக, கோவிட்-19 தொற்றுநோயின் விளைவுகளை ஒன்றிணைந்து சமாளிக்க முன்வரவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

EU எனும் ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கப்பட காரணமாக இருந்த மதிப்பீடுகளுக்கு ஊக்கமளித்து வளர்ப்பதுடன், கோவிட்-19 தொற்றுநோயின் விளைவுகளை ஒன்றிணைந்து சமாளிக்க ஐரோப்பிய நாடுகள் முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இரண்டாம் உலகப்போருக்குப்பின் ஐரோப்பிய நாடுகளிடையே ஒப்புரவை ஊக்குவித்து, ஒன்றிப்புக்கு வழிவகுத்த, 1950ம் ஆண்டு மே மாத 9ம் தேதியின்  Schuman ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதன் 70ம் ஆண்டு சிறப்பிக்கப்படுவதைப்பற்றி, இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்த அறிக்கையின் பயனாக விளைந்த நிலையானத் தன்மையையும், அமைதியையும் நாம் இன்று அனுபவித்து வருகின்றோம் என்று கூறினார்.

ஐரோப்பிய ஒன்றிய அவையில் பொறுப்பிலுள்ளோர், இவ்வவையின் வரலாற்று ஏடுகளால் தூண்டப்பட்டவர்களாக, இன்றைய தொற்றுநோய் சூழலில், ஒன்றிப்பு மற்றும் இணக்க உணர்வுடன் செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னரும் வளர்ச்சிப் பாதையில் முன்னேற இயலாமல் திணறிக்கொண்டிருந்த ஐரோப்பாவிற்கு, பிரான்ஸ் வெளியுறவு அமைசர் Robert Schuman அவர்கள் முன்வைத்த பரிந்துரைகளின் வெற்றியே, ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட வழிவகுத்தது என்பதையும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 May 2020, 13:05