மக்கள் நடமாட்டம் ஏதுமற்ற பாத்திமா அன்னை மரியாவின் திருத்தலம் மக்கள் நடமாட்டம் ஏதுமற்ற பாத்திமா அன்னை மரியாவின் திருத்தலம் 

பாத்திமா அன்னையின் செய்திகள், இன்றும் பொருளுள்ளவை

உலகின் அமைதியை வலியுறுத்திய பாத்திமா அன்னை மரியாவின் செய்திகள், இன்று, குறிப்பாக, கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் துன்புறும் இவ்வுலகிற்கு, பொருளுள்ளதாக இருக்கின்றன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மே 13, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட பாத்திமா அன்னை மரியாவின் திருநாளை, தன் புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த அன்னை. சிறாருக்கு வழங்கிய காட்சிகள் வழியே கூறிய செய்திகளுக்கு நாம் செவிமடுப்போம் என்று கூறினார்.

பாத்திமா அன்னை மரியாவின் செய்திகள்

உலகின் அமைதிக்காக செபிக்கும்படி சிறாரிடம் வலியுறுத்திய பாத்திமா அன்னை மரியாவின் செய்திகள், இன்று, குறிப்பாக, கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் துன்புறும் இவ்வுலகிற்கு, பொருளுள்ளதாக இருக்கின்றன என்பதை திருத்தந்தை எடுத்துரைத்தார்.

தன் மறைக்கல்வி உரையின் இறுதியில், போலந்து நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1981ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி, பாத்திமா அன்னை மரியாவின் திருநாளன்று, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், புனித பேதுரு வளாகத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட வேளையில், அன்னை மரியாவின் தாய்மை நிறைந்த பாதுகாப்பை உணர்ந்தார் என்று குறிப்பிட்டார்.

2ம் ஜான் பால் பிறந்தநாளின் நூறாம் ஆண்டு நினைவு

மேலும், மே 18, வருகிற திங்களன்று, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் பிறந்தநாளின் நூறாம் ஆண்டு நினைவை சிறப்பிக்கும் வண்ணம், புனித பேதுரு பெருங்கோவிலில் அவரது கல்லறை இருக்கும் பீடத்தில் தான் திருப்பலி நிறைவேற்றவிருப்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறைக்கல்வி உரையின் இறுதியில் கூறினார்.

பாத்திமா திருத்தலத்தில் திருத்தந்தையர்

புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், வத்திக்கான் வளாகத்தில் சுடப்பட்ட 1981ம் ஆண்டைத் தொடர்ந்து, 1982ம் ஆண்டு, பாத்திமா திருத்தலத்திற்கு அவர் சென்று, தன் மீது பாய்ந்த குண்டு ஒன்றை அத்திருத்தலத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தார். அந்த குண்டு, தற்போது, அன்னை மரியாவுக்கு சூடப்பட்டுள்ள மகுடத்தில் பதிக்கப்பட்டுள்ளது.

.மேலும், புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் 1991 மற்றும் 2000 ஆகிய இரு ஆண்டுகள் பாத்திமா திருத்தலத்திற்கு சென்றார் என்பதும், அவர் 2000மாம் ஆண்டு, ஜெசிந்தா, பிரான்சிஸ்க்கோ ஆகிய இருவரையும் அருளாளர்களாக உயர்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கன.

அதே வண்ணம், பாத்திமா நகரில் அன்னை மரியா முதல் முறை தோன்றிய 1917ம் ஆண்டின் முதல் நூற்றாண்டு சிறப்பிக்கப்பட்ட வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திருத்தலத்தில், இடையர்களான ஜெசிந்தா, பிரான்சிஸ்க்கோ ஆகிய இருவரையும் புனிதர்களாக உயர்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2020ம் ஆண்டு மே 13ம் தேதி சிறப்பிக்கப்பட்ட பாத்திமா அன்னை மரியாவின் திருநாளன்று, இத்திருத்தலத்தின் வரலாற்றில் முதல் முறையாக, பக்தர்களின் பங்கேற்பின்றி, திருநாள் திருப்பலிகளும், அன்னை மரியாவின் பக்தி முயற்சிகளும் நடைபெற்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2020, 13:24