புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் 

மே 18ம் தேதி, 2ம் ஜான் பால் பிறப்பின் நூற்றாண்டு திருப்பலி

மே 18ம் தேதி முதல், இத்தாலியில், அனைத்து ஆலயங்களிலும், மக்களின் பங்கேற்புடன் நடைபெறும் திருப்பலிகள் துவங்கவிருப்பதால், மே 19ம் தேதி முதல், திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலிகளின் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்படும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மே 18, வருகிற திங்களன்று, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் பிறந்த நாளின் 100ம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்படுவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவிலில், புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள பீடத்தில், திங்கள் காலை 7 மணிக்கு, திருப்பலி நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2ம் ஜான் பால் பிறப்பின் நூற்றாண்டு திருப்பலி

1920ம் ஆண்டு, மே மாதம் 18ம் தேதி, போலந்து நாட்டின் Wadowice நகரில் பிறந்த Karol Józef Wojtyła என்ற குழந்தை, பின்னர், 2ம் ஜான் பால் என்ற பெயருடன், திருஅவையின் தலைவராக 27 ஆண்டுகள் பணியாற்றி, 2005ம் ஆண்டு இறையடி சேர்ந்தார். அவரது, பிறப்பின் நூற்றாண்டையும், அவரது மரணத்தின் 15ம் ஆண்டையும் சிறப்பிக்கும் இவ்வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்தச் சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றுகிறார்.

மே 19ம் தேதி முதல் நேரடி ஒளிபரப்பு நிறுத்தம் 

மேலும், மே 18ம் தேதி முதல், இத்தாலியில் உள்ள அனைத்து ஆலயங்களிலும், மக்களின் பங்கேற்புடன் நடைபெறும் திருப்பலிகள் துவங்கவிருப்பதால், மே 18ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் இத்திருப்பலியைத் தொடர்ந்து, மே 19ம் தேதி முதல், அவர் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றும் திருப்பலிகளின் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 9ம் தேதி முதல் நடைபெற்ற நேரடி ஒளிபரப்பு

கொரோனா தொற்றுக்கிருமியின் நெருக்கடியால், இத்தாலியில், மார்ச் மாத துவக்கத்திலிருந்து, ஆலயங்களில், மக்கள், வழிபாடுகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டதையடுத்து, மார்ச் 9 திங்கள் முதல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றும் திருப்பலிகளை ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு இசைவு தெரிவித்தார்.

அத்துடன், புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற புனித வார வழிபாடுகள், உயிர்ப்புப்பெருவிழா 'ஊர்பி எத் ஓர்பி' சிறப்புச் செய்தி, மற்றும், கொரோனா தொற்றுக்கிருமியிலிருந்து இவ்வுலகைக் காப்பதற்கு, புனித பேதுரு வளாகத்தில், மார்ச் 27, வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு நடைபெற்ற சிறப்பு செப வழிபாடு மற்றும், 'ஊர்பி எத் ஓர்பி' சிறப்பு ஆசீர் ஆகிய அனைத்து நிகழ்வுகளும், மக்களின் பங்கேற்பின்றி, தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பாயின.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2020, 14:39