அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு படிக்கச் செல்லும் லெபனான் மாணவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு படிக்கச் செல்லும் லெபனான் மாணவர்கள் 

லெபனான் நாட்டின் கல்விக்கு திருத்தந்தை உதவி

லெபனான் நாட்டில் சிறாரின் கல்வி வாய்ப்பை உறுதிசெய்வதற்கென, இரண்டு இலட்சம் அமெரிக்க டாலர்களை அனுப்புவதற்குத் தீர்மானித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

லெபனான் நாடு உருவாக்கப்பட்டதன் நூறாம் ஆண்டு சிறப்பிக்கப்பட்டுவரும் இவ்வாண்டில், அந்நாட்டில் கல்வி வசதியை, குறிப்பாக, திருஅவை நிறுவனங்கள் பணியாற்றும் சிறிய நகரங்களில், சிறாரின் கல்வி வாய்ப்பை உறுதிசெய்வதற்கென, இரண்டு இலட்சம் அமெரிக்க டாலர்களை அனுப்புவதற்குத் தீர்மானித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

லெபனான் நாட்டு மக்களுடன் தன் அருகாமையை வெளிப்படுத்தும் விதமாக, திருத்தந்தை வழங்கும் இந்நிதி உதவியை, திருப்பீடச் செயலகம் மற்றும், கீழை வழிபாட்டுமுறை பேராயம் ஆகியவற்றின் வழியாக, லெபனான் திருப்பீடத் தூதரகத்திற்கு அனுப்புவதற்கு, திருத்தந்தை தீர்மானித்துள்ளார்.

இந்நிதி, 400 கல்வி உதவித்தொகைகளுக்கெனப் பயன்படுத்தப்படும் என்றும், கோவிட்-19 தொற்றுக்கிருமி உருவாக்கியுள்ள நெருக்கடிநிலையைக் களைவதற்கென, கீழை வழிபாட்டுமுறை பேராயம், ஏற்கனவே உருவாக்கியுள்ள அவசரகால நிதியுடன், இந்த நிதி உதவியும் சேர்த்துக்கொள்ளப்படும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்புக்குரிய லெபனான் நாடு, அண்மை மாதங்களாக எதிர்கொள்ளும் துன்பநிலை  குறித்து கவனித்துவருவதாகக் கூறியுள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அந்நாட்டின் தேசிய மற்றும், பன்னாட்டு அமைப்புகள் அனைத்தும், பிரிவினைகளை அகற்றி, பொதுநலனுக்காகப் பொறுப்புடன் உழைக்கும் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.

நூறாம் ஆண்டை சிறப்பித்துவரும், கேதார் மரங்களின், மாபெரும் நாடாகிய லெபனான், தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடிநிலை, அந்நாட்டு மக்களின், குறிப்பாக, தங்களின் நிச்சயமற்ற வருங்காலத்தை எதிர்கொள்ளும் இளைய தலைமுறையின் நம்பிக்கையைத் திருடுகின்றது மற்றும், துன்பத்தையும், வறுமையையும் உருவாக்கியுள்ளது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கென நடைபெற்ற சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தின் தீர்மானத் தொகுப்புகள் அடங்கிய, திருத்தூது அறிவுரை மடலை, ("Ecclesia in Medio Oriente") முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், லெபனான் நாட்டில் வெளியிட்டார் என்றும், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், இந்நாட்டை, "செய்திவழங்கும் நாடு" என்று விவரித்துள்ளார் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார். 

மனித உடன்பிறந்தநிலை பற்றிய ஏடு, இந்த உலகிற்கு வழங்க விரும்பும், நல்லிணக்கம் மற்றும், உடன்பிறந்த உணர்வு ஆகிய பண்புகளுக்கு லெபனான் நாடு, எப்போதும் எடுத்துக்காட்டாய் விளங்கவேண்டும் என்ற, தன் ஆவலை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Harissa மலையிலிருந்து லெபனான் நாட்டைப் பராமரித்துவரும் இறைவனின் அன்னை, இம்மக்களை, நாட்டின் புனிதர்களோடு இணைந்து பாதுகாப்பாராக என்று கூறியுள்ளார்.

1920ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி, மாபெரும் லெபனான் நாடு உருவானது. இதன் நூறாம்  ஆண்டு கொண்டாட்டங்கள், 2020ம் ஆண்டு சனவரி முதல் தேதி துவங்கியது. இக்கொண்டாட்டம், இவ்வாண்டு இறுதிவரை நடைபெறும்.

1516ம் ஆண்டு முதல், 1918ம் ஆண்டு வரை, நான்கு நூற்றாண்டுகள், ஒட்டமான் ஆட்சியின்கீழ் இருந்த லெபனான், 1920ம் ஆண்டில் பிரெஞ்ச் ஆதிக்கத்தின்கீழ் வந்தது. பின்னர், இந்நாடு, 1943ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி விடுதலை அடைந்தது.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 May 2020, 15:17