புனித வாரத்தில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்,  முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் புனித வாரத்தில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்  

கிறிஸ்துவிடம் செல்வதற்கு நல்வழிகாட்டியதற்கு நன்றி

வருகிற திங்களன்று, புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் பிறந்த நாளின் நூறாம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்படுவதையொட்டி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், போலந்து நாட்டு ஆயர்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மே 18, வருகிற திங்களன்று, புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் பிறந்த நாளின் நூறாம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்படுவதையொட்டி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், போலந்து நாட்டு ஆயர்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களுக்குச் செயலராகப் பணியாற்றிய கர்தினால் Stanislaw Dziwisz அவர்களுக்கு, ஜெர்மன் மொழியில் மடல் எழுதி அனுப்பியுள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தனக்கு முந்தைய மாபெரும் திருத்தந்தை பற்றிய பசுமையான நினைவுகள் மற்றும், அவர் தன் வாழ்வில் ஏற்படுத்திய நல்தாக்கங்கள் பற்றி எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், தனக்கு அன்புக்குரிய நண்பராகவும், இரக்கம் மிகுந்தவராகவும் விளங்கினார் என்றும், திருஅவையின் தலைமைப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல், கிறிஸ்து மீதும், திருஅவை மீதும் புதியதோர் ஆர்வத்தைத் தூண்டினார் என்றும் அம்மடலில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.     

“அஞ்சாதீர்கள், திறங்கள், கிறிஸ்துவுக்குக் கதவுகளை அகலத் திறங்கள்” என்று, திருத்தந்தையாகப் பணியேற்ற திருப்பலியில் ஆற்றிய மறையுரையில் அத்திருத்தந்தை கூறினார் என்றும், இவ்வாறு அவர் கூறியது, அவரின் தலைமைப்பணி முழுவதையும் உள்ளடக்குவதாக இருந்தது என்றும், அம்மடலில் கூறப்பட்டுள்ளது.  

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், 104 திருத்தூதுப்பயணங்களை மேற்கொண்டுள்ளார், அவர் சென்றவிடமெல்லாம், நற்செய்தியை, மகிழ்வின் செய்தியாக அறிவித்தார் என்று கூறியுள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இவ்வாறு, கிறிஸ்துவுக்கு எது நல்லது என்பதை வலியுறுத்தும் அவரது கடமையை ஆற்றினார் என்று குறிப்பிட்டுள்ளார்.  

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் எழுதிய 14 திருமடல்களில், திருஅவையின் நம்பிக்கை மற்றும், அதன் போதனையை, மனிதமிக்க வழியில், மிகத்தெளிவாகவும், உறுதிப்பாட்டுடனும் வழங்கினார் என்றும், இவ்வாறு வழங்கியதன் வழியாக, சந்தேகம் மற்றும், நிச்சயமற்றதன்மையால் சூழ்ந்திருந்த மேற்குலக திருஅவையில், முரண்பாடுகளைச் சாதுரியமாகக் கையாண்டார் என்றும் கூறியுள்ளார், திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

கிறிஸ்தவ நம்பிக்கைக்கு முக்கிய மையமாக அமைந்துள்ள இறை இரக்க பக்தியை வலியுறுத்திய கிராகோவ் நகர் புனித Faustina Kowalskaவின் செய்தியால், திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், துவக்கமுதல் மிகவும் ஈர்க்கப்பட்டிருந்தார், இதனாலே உயிர்ப்பின் இரண்டாவது ஞாயிறை இறை இரக்க ஞாயிறாக அறிவித்தார் என்றும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ளார்.

“அன்புக்குரிய புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்” என்ற செபத்துடன், இம்மடலை நிறைவு செய்துள்ளார், திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

1920ம் ஆண்டு, மே மாதம் 18ம் தேதி, போலந்து நாட்டின் Wadowice நகரில் பிறந்த Karol Józef Wojtyła என்ற குழந்தை, பின்னர், 2ம் ஜான் பால் என்ற பெயருடன், திருஅவையின் தலைவராக 27 ஆண்டுகள் பணியாற்றி, 2005ம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

மே 18, வருகிற திங்களன்று அவரது, பிறப்பின் நூற்றாண்டும், அவரது மரணத்தின் 15ம் ஆண்டும் சிறப்பிக்கப்படும் இவ்வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவிலில், புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள பீடத்தில், திங்கள் உரோம் நேரம் காலை 7 மணிக்கு, சிறப்புத் திருப்பலி நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 May 2020, 16:21