புதன் மறைக்கல்வியுரையின்போது - 130520 புதன் மறைக்கல்வியுரையின்போது - 130520 

மறைக்கல்வியுரை - இறைவனுடன் உரையாடும்போது, அஞ்சத் தேவையில்லை

நம்மையும் தாண்டிய ஒருவரை, நாம் உண்மையில் இயேசுவின் கனிவான முகத்தில் கண்டு கொள்வதிலிருந்து கிறிஸ்தவ செபம் என்பது பிறப்பெடுக்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
செபம் குறித்த ஒரு புதிய தொடரை கடந்த வாரம் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம் அதன் தொடர்ச்சியாக, கிறிஸ்தவர்களின் செபம் குறித்து தன் புதன் மறைக்கல்வியுரையில் எடுத்தியம்பினார். முதலில், 63ம் திருப்பாடலில் இருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது.

கடவுளே! நீரே என் இறைவன்!
உம்மையே நான் நாடுகின்றேன்;
என் உயிர் உம்மீது
தாகம் கொண்டுள்ளது;
நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல
என் உடல் உமக்காக ஏங்குகின்றது.
உம் ஆற்றலையும் மாட்சியையும்
காண விழைந்து
உம் தூயகம் வந்து
உம்மை நோக்குகின்றேன்.
ஏனெனில், உமது பேரன்பு
உயிரினும் மேலானது;
என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன.
என் வாழ்க்கை முழுவதும்
இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்;
கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.
அறுசுவை விருந்தில்
நிறைவடைவதுபோல
என் உயிர் நிறைவடையும்;
என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால்
உம்மைப் போற்றும்.
என்னை அழித்துவிடத் தேடுவோர்
பூவுலகின் ஆழத்திற்குள் செல்வர்.(தி.பா. 63,2-5.9)

அதன்பின் திருத்தந்தையின் மறைக்கல்வியுரைத் தொடர்ந்தது.

மறைக்கல்வியுரை
அன்பு சகோதரர்களே, சகோதரிகளே,
செபம் குறித்த நம் தொடர் மறைக்கல்வியுரையில், நாம் இன்று, செபத்தின் முக்கிய பண்புகள் குறித்து நோக்குவோம். நம்மையும் தாண்டிய ஒருவருக்காக நம் முழுமையும் ஏங்குவதை உள்ளடக்கியதாக செபம் உள்ளது. நம்மையும் தாண்டிய ஒருவரை, நாம் உண்மையில் இயேசுவின் கனிவான முகத்தில் கண்டு கொள்வதிலிருந்து கிறிஸ்தவ செபம் பிறப்பெடுக்கிறது. இறைவனை, தந்தை என அழைக்க நமக்குக் கற்றுத்தரும் இயேசு, நம்முடன்கூடிய உறவுக்குள் தனிப்பட்ட விதத்தில் நுழைய ஆவல்கொள்கிறார்.
தனது இறுதி இரவு உணவு வேளையில் இடம்பெற்ற பிரியாவிடை உரையின்போது, இயேசு, தன் சீடர்களை, பணியாளர்கள் என்றல்ல, மாறாக, நண்பர்கள் என்றே அழைக்கிறார். நம் செபத்தின் வழியாக இறைவனுடன் உரையாடும்போது, நாம் அஞ்சத்தேவையில்லை, ஏனெனில், அவர் நம் தோழர். நம் நிலைமைகள் எத்தகையதாக இருந்தாலும், நாம் நம்மைக் குறித்து மிகவும் குறைவான மதிப்பீடுகளைக் கொண்டிருந்தாலும், கடவுள் எப்போதும் நம்பிக்கைக்குரியவராவும், நம்மை கருணையில் வாரி அணைப்பவராகவும் இருக்கிறார். எவ்வித கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் அற்ற இந்த அன்பை நாம் கல்வாரியில் காண்கிறோம். கடவுள் நம்மீது அன்புகூர்வதை எந்நாளும் நிறுத்துவதில்லை, இறுதி எல்லைவரை அவரது அன்பு நம்மைத் தொடர்கிறது. நம்மோடு இறைவன் கொண்டுள்ள முடிவற்ற உடன்படிக்கையினுள் நுழைவதன் வழியாக, நாம் செபிக்க முயல்வோம். நம் இறைத்தந்தையின் அன்பும், கருணையும் நிறைந்த கரங்களுக்குள் நம்மை ஒப்படைப்பதே, ஒவ்வொரு கிறிஸ்தவ செபத்தின் கொழுந்துவிட்டு எரியும் இதயமாக, மையமாக இருக்க வேண்டும். இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாத்திமா அன்னை மரியாவின் திருவிழாவாகிய இப்புதன், அன்னை மரியா பாத்திமா நகரில் சிறார்களுக்கு முதன் முதலில் காட்சியளித்த நாள் என்பதை அனைவர்க்கும் நினைவூட்டி, அன்னைமரியாவிடம் செபிக்குமாறும் விண்ணப்பித்தார். பின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2020, 12:13