தேடுதல்

மக்களின் பங்கேற்பின்றி திருத்தந்தை பிரான்சிஸ் நிறைவேற்றிய குருத்தோலை ஞாயிறு திருப்பலி மக்களின் பங்கேற்பின்றி திருத்தந்தை பிரான்சிஸ் நிறைவேற்றிய குருத்தோலை ஞாயிறு திருப்பலி 

Covid-19 தாக்கங்கள் குறித்து திருத்தந்தையின் பேட்டி

ஒவ்வொரு நாளும் காலை தான் நிறைவேற்றும் திருப்பலி பல்லாயிரம் மக்களைச் சென்றடைகிறது என்பதும், மார்ச் 27ம் தேதி, மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வழிபாடு பல்லாயிரம் மக்களுக்கு பயன்பட்டது என்பதும் திருப்தியளிக்கிறது - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வீட்டுக்குள் தனித்திருக்கவேண்டிய இவ்வேளையில், மக்களை, நான் என் உள்ளத்தில் தொடர்ந்து தாங்கியிருக்கிறேன், அதன் விளைவாக, நான், என்னைப்பற்றியே சிந்திப்பது குறைவதற்கும், மக்களுக்காக செபிக்கும் நேரம் அதிகரிப்பதற்கும் வழி வகுக்கிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Covid-19 தொற்றுநோயின் உலகளாவிய பரவல் நிலை, திருத்தந்தையின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்ன என்ற கேள்வியுடன், பிரித்தானிய செய்தியாளர் Austen Ivereigh அவர்கள், திருத்தந்தையுடன் மேற்கொண்ட ஒரு தொலைதூர பேட்டியின் கருத்துக்கள், The Tablet இதழிலும், Commonweal இதழிலும் வெளியாகியுள்ளன.

தனித்திருந்தாலும், மக்களுடன் ஒன்றித்து...

தனித்திருக்கவேண்டிய இச்சூழலில், மக்களுடன் ஒன்றித்திருக்கும் வண்ணம், ஒவ்வொரு நாளும் காலை, தான் நிறைவேற்றும் திருப்பலி, பல்லாயிரம் மக்களைச் சென்றடைகிறது என்பதும், மார்ச் 27ம் தேதி, புனித பேதுரு வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வழிபாடு பல்லாயிரம் மக்களுக்கு பயன்பட்டது என்பதும் தனக்கு திருப்தியளிக்கிறது என்று திருத்தந்தை இப்பேட்டியில் கூறியுள்ளார்.

நெருக்கடி வேளையில், திருஅவையின் முயற்சிகள்

இந்த நெருக்கடி வேளையில், திருஅவை மேற்கொண்டுள்ள முயற்சிகளைக் குறித்து கேள்வி எழுந்தபோது, உலகின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் திருஅவை, அந்தந்தச் சூழல்களுக்கு ஏற்றவாறு, படைப்பாற்றல் மிக்க வழிகளை மேற்கொண்டு வருவது தனக்கு நிறைவளிக்கிறது என்பதை, ஒரு சில எடுத்துக்காட்டுகளுடன் திருத்தந்தை குறிப்பிட்டார்.

நாடுகள் வழங்கியுள்ள பதிலிறுப்பு

நாடுகள் இந்த நெருக்கடிக்கு வழங்கியுள்ள பதிலிறுப்பு குறித்து Austen Ivereigh அவர்கள் கேள்வி எழுப்பியபோது, ஒரு சில நாடுகள், மிகச் சிறந்த முறையில், எடுத்துக்காட்டான வழிகளில் பதிலிறுத்துள்ளன என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வீடற்றவர்களுக்கு, அரசுகள் செய்துவரும் முயற்சிகள், இன்னும் கூடுதலாக இருக்கவேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார்.

சுற்றுச்சூழல் சீரடைவதற்கு ஒரு வாய்ப்பு

கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடியால், உலக மக்கள் தங்கள் இல்லங்களிலேயே தங்கவேண்டிய சூழல், உலக சுற்றுச்சூழல் சீரடைவதற்கு தரப்பட்டுள்ள ஒரு வாய்ப்பு என்ற கோணத்திலும், இப்பேட்டியில் கேள்வி பதில்கள் இடம்பெற்றன.

'இல்லத் திருஅவை'

மக்கள் ஆலயங்களுக்குச் செல்ல இயலாமல், வீடுகளிலேயே தங்கி, வழிபாடுகளில் கலந்துகொல்வதைக் குறித்து கேள்வி எழுந்தபோது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'இல்லத் திருஅவை' ("home Church") என்ற எண்ணத்தைக் குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்த வேளையில், இந்நிலை, மற்றவரிடமிருந்து தப்பித்துச் செல்வதற்கல்ல, மாறாக, எவ்வாறு மற்றவர்களுடன் தொடர்பு சாதனங்களின் உதவியுடன் உறவு கொள்ளமுடியும் என்பதைக் காட்டும் காலம் இது என்று கூறினார்.

இறுதியாக, இப்பேட்டியில், மாறுபட்ட இந்த தவக்காலம், புனித வாரம், உயிர்ப்புப் பெருவிழா ஆகியவற்றைக் குறித்தும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள வயதில் முதிர்ந்தோர், மற்றும், சிறைகளில் அடைபட்டிருக்கும் இளையோர் ஆகியோரைக் குறித்தும் திருத்தந்தை தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 April 2020, 14:10