தேடுதல்

அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப்பின் ஆசி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப்பின் ஆசி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

மலேரியாவை ஒழிக்க தொடர்ந்து போராடுவோம்

விசுவாசிகள் எங்குச் சென்றாலும் நற்செய்தி நூலை எடுத்துச் செல்லுங்கள். அதன் வழியாக இறைவார்த்தை எப்போதும் நமக்கு அருகில் இருக்கும் - திருத்தந்தை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பல நாடுகளில் இலட்சக்கணக்கான மக்களைப் பாதித்துள்ள மலேரியா நோயை ஒழிக்கவும், அந்நோய் தாக்கியுள்ளவர்களைக் குணமாக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், தொடர்ந்து நடைபெறுமாறு, ஏப்ரல் 26, இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப்பின் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 25, இச்சனிக்கிழமையன்று, ஐ.நா. நிறுவனம் மலேரியா தடுப்பு உலக நாளைக் கடைப்பிடித்தது என்று கூறிய திருத்தந்தை, இந்த கொரோனா கொள்ளை நோய் காலத்திலும்கூட, மலேரியாவை ஒழிக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.

அனைத்து நோயாளிகள், அவர்களுக்குப் பணியாற்றுவோர் மற்றும், ஒவ்வொரு மனிதரும் அடிப்படை நலவாழ்வு வசதியைப் பெறுவதற்கு உறுதிபெற உழைப்பவர்கள்   அனைவருக்கும் மிக நெருக்கமாக தான் இருப்பதாக உரைத்தார் திருத்தந்தை.

போலந்தில் தேசிய விவிலிய வாசிப்பு

போலந்தில், தேசிய அளவில் திருவிவிலியம் வாசிப்பதில் பங்குகொள்ளும் எல்லாருக்கும் சிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை, ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் நற்செய்தி வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் இஞ்ஞாயிறன்று வலியுறுத்தினார்.

விசுவாசிகள் எங்குச் சென்றாலும் நற்செய்தி நூலை எடுத்துச் செல்லுமாறும், அதன் வழியாக, இறைவார்த்தை நமக்கு அருகில், ஏன் உடலளவிலும்கூட நமக்கு அருகில் எப்போதும் இருக்கும் என்று திருத்தந்தை கூறினார்.

மேலும், அன்னை மரியாவுக்குச் சிறப்பாக அர்ப்பணிக்கப்பட்ட மே மாதத்தில், செபமாலை செபிக்குமாறு கூறிய திருத்தந்தை, இச்சனிக்கிழமையன்று தான் வெளியிட்ட ஒரு மடல் வழியாக, வீடுகளில் செபமாலை செபிக்க அழைப்பு விடுத்ததையும் எடுத்துரைத்தார்.

நாம் வாழ்கின்ற இந்த துன்ப காலத்தில் மிகுந்த நம்பிக்கை மற்றும் விசுவாசத்துடன் வாழ அன்னை மரியா நமக்கு உதவுவாராக என்று, அல்லேலூயா வாழ்த்தொலி உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 April 2020, 14:36