புனித பேட்ரிக் பேராலயத்தில் கர்தினால் டோலன் நிறைவேற்றிய உயிர்ப்பு விழா திருப்பலி புனித பேட்ரிக் பேராலயத்தில் கர்தினால் டோலன் நிறைவேற்றிய உயிர்ப்பு விழா திருப்பலி 

நியூ யார்க் நகர மக்களுக்காக செபித்துவரும் திருத்தந்தை

நியூ யார்க் நகரில் கொரோனா தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்காகவும், குறிப்பாக, Brooklyn-Queens மறைமாவட்டத்தின் மக்களுக்கு மிகச் சிறப்பாக செபிப்பதாகக் கூறிய திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 14, இச்செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நியூ யார்க் பேராயர், கர்தினால் டிமோத்தி டோலன் அவர்களை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, நியூ யார்க் பகுதியில் வாழும் அனைவருக்காகவும் தான் சிறப்பான முறையில் செபித்து வருவதாகக் கூறினார்.

இச்செவ்வாய், நியூ யார்க் நேரம் பிற்பகல் 2 மணிக்கு, திருத்தந்தை தன்னை அழைத்ததாகவும், நியூ யார்க் நகரில் கொரோனா தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்காகவும் தான் செபிப்பதாகவும் தன்னிடம் கூறினார் என்றுரைத்த கர்தினால் டோலன் அவர்கள், Brooklyn மற்றும் Queens மறைமாவட்டத்தின் மக்களுக்கு தான் மிகச் சிறப்பாக செபிப்பதாக ஆயர் Nicholas DiMarzio அவர்களுக்குக் கூறும்படி திருத்தந்தை சொன்ன செய்தியை, தான் ஆயருக்கு வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நெருக்கடியானச் சூழலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காட்டிவரும் உண்மையான தலைமைத்துவப் பண்புக்கு நன்றியையும், அவருக்கு, தன்னுடைய மற்றும் நியூ யார்க் மக்களுடைய செபங்களையும் தெரிவித்ததாக கர்தினால் டோலன் அவர்கள் கூறினார்.

மருந்துக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்காக செபிப்போம் என்று திருத்தந்தை இவ்வியாழன் திருப்பலியில் கூறிய கருத்தை அடிப்படையாகக் கொண்டு முதல் டுவிட்டர் செய்தியையும், இறைவனின் மகிழ்வால் நிறையப்படுவது நம் வாழ்வில் உருவாக்கும் தாக்கங்கள் குறித்து இரண்டாவது டுவிட்டர் செய்தியையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏப்ரல் 16 இவ்வியாழனன்று வெளியிட்டார்.

அத்துடன், ஏப்ரல் 15 இப்புதனன்று திருப்பலியில் முதியோருக்காக வேண்டுதலை மேற்கொண்ட திருத்தந்தை, அதை, இப்புதனன்று வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியிலும் கூறியிருந்தார்.

"முதியோர் இல்லங்களில் தனித்து விடப்பட்ட நிலையில், மரணத்தைச் சந்திக்க அச்சம் கொண்டுள்ள முதியோருக்காக சிறப்பாக வேண்டிக்கொள்வோம். அவர்களே நம் வேர்கள். அவர்கள் நமக்கு நம்பிக்கையையும், பாரம்பரியத்தையும் தருகின்றனர். இறைவன் அவர்கள் அருகில் இருக்குமாறு செபிப்போம்" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

அத்துடன், தன் மறையுரையில் பகிர்ந்துகொண்ட ஒரு கருத்தை வெளியிடும் வகையில், "நம்பிக்கைக்குரிய இறைவன், மக்களை பொறுமையாக வழிநடத்துகிறார், அவர்களுக்குச் செவிமடுக்கிறார். எருசலேமைவிட்டு அகன்று சென்ற இரு சீடர்களின் உள்ளத்தில் மீண்டும் அன்பையும், ஆர்வத்தையும் பற்றியெரியச் செய்தார்" என்ற கருத்து இரண்டாவது டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தது.

இயேசு வழங்கிய பேறுகள் குறித்து மறைக்கல்வி உரை வழங்கிய திருத்தந்தை, அமைதியை உருவாக்குவோர் இறைவனின் மக்கள், அந்த அமைதியை கொணரும் வேளையில், அவர்கள், தங்கள் வாழ்வையே பரிசாக தரவேண்டியிருந்தாலும், ஒப்புரவை எல்லாச் சூழல்களிலும் உறுதி செய்யவேண்டும் என்ற கருத்துக்கள் அடங்கிய மூன்றாவது டுவிட்டர் செய்தியையும் வெளியிட்டிருந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 April 2020, 14:13