திருத்தந்தையின் மறைக்கல்வியுரை - 080420 திருத்தந்தையின் மறைக்கல்வியுரை - 080420 

மறைக்கல்வியுரை : தன்னையே கையளிக்கும் அன்பில், கடவுளின் வல்லமை

இறைமகனின் மரணமும் உயிர்ப்பும் நமக்கு காண்பிப்பது என்னவென்றால், உலக சக்தியெல்லாம் கடந்து சென்றுவிடும், ஆனால், அன்பு ஒன்றே என்றும் நீடித்து நிலைத்திருக்கும் என்பதேயாகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

கடந்த சில வாரங்களாக இயேசுவின் மலைப்பொழிவு பேறுகள் குறித்த ஒரு தொடரை வழங்கிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்ப்பை நோக்கிய புனித வாரத்தில் நாம் இருக்கும் இவ்வேளையில், அதுவும், கொள்ளை நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இயேசுவின் பாடுகள், மற்றும், உயிர்ப்பைப் பற்றி எடுத்துரைத்து, அன்பே என்றும் நிலைத்திருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

அன்பு சகோதர சகோதரிகளே, இன்றைய கொள்ளை நோய் சூழல் உருவாக்கியிருக்கும் துன்பங்களும் நிச்சயமற்ற நிலைகளும்,கடவுள் எங்கே சென்று விட்டார் என சிலரை கேட்க வைக்கக்கூடும். புனித வாரத்தின் இந்நாட்களில், நாம், இறைவன் பட்ட பாடுகளின் விவரங்களைக் கேட்டு ஆறுதல் பெற முடியும். இயேசுவும், தான் வாழ்ந்த காலத்தில், 'இவர்தான் வாக்களிக்கப்பட்ட மெசியாவா' என்ற கேள்வியை பலரிடமிருந்து எதிர்நோக்கினார். இயேசுவின் இறப்பிற்குப் பின்னர்தான், நூற்றுவர் படைத்தலைவர் ஒருவர், 'இயேசு உண்மையிலேயே கடவுளின் மகனாக இருந்தார்' என்பதை அறிக்கையிட்டு உறுதிசெய்தார். இயேசு கிறிஸ்து, சிலுவையில் துன்பங்களை அமைதியாக ஏற்றுக்கொண்டதைக் கண்ட நூற்றுவர் தலைவர், இந்த அறிக்கையை வெளியிடுகிறார். கடவுள் தன் துன்பங்களை அமைதியாகத் தாங்கியது, நமக்கும் ஒரு பாடத்தைக் கற்றுத்தருகின்றது, அதாவது, தாழ்ச்சியுடைய, மற்றும், தன்னையே  கையளிக்கும் அன்பில்தான் கடவுளின் வல்லமை வெளிப்படுகின்றது என்பதாகும்.

இயேசுவின் சீடர்களைப்போல் நாமும், நமக்கு எது சரியெனத் தோன்றுகிறதோ, அந்த வழியில் இறைவன் தன் வல்லமையைப் பயன்படுத்தி தீர்வு காணவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.  இருப்பினும், இறைமகனின் மரணமும் உயிர்ப்பும், நமக்கு காண்பிப்பது என்னவென்றால், உலக சக்தியெல்லாம் கடந்து சென்றுவிடும், ஆனால், அன்பு ஒன்றே என்றும் நீடித்து நிலைத்திருக்கும் என்பதேயாகும். அன்பு சகோதரர் சகோதரிகளே, சிலுவையிலறையுண்டு உயிர்த்த இறைவனிடமிருந்து வல்லமையைப் பெற்றுக்கொள்வோம்.  அவரே நம் நொறுங்குண்ட நிலைகளை அரவணைத்து, நம் பாவங்களைக் குணப்படுத்தி, நம்மை அவரருகே கொணர்ந்து, நம் சந்தேகங்களை விசுவாசமாகவும், அச்சங்களை நம்பிக்கையாகவும் மாற்றுகிறார்.

இம்மறைக்கல்வியுரையின் இறுதியில், சமூகத்தொடர்பு சாதனங்கள் வழியாக, தன்னோடு இந்த மறைக்கல்வி நேரத்தில் இணைந்திருக்கும் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களை வெளியிடுவதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய்மைப்படுத்தப்பட்ட இதயத்துடனும், தூய ஆவியாரின் வல்லமையால் இடம்பெறும் புதுப்பித்தலுடனும், இயேசுவின் உயிர்ப்பை சிறப்பிக்க இந்த புனித வாரம் நம்மை நடத்திச் செல்வதாக என வேண்டி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 April 2020, 12:05