பிரெஞ்சு அரசுத்தலைவர் மக்ரோன், திருத்தந்தையுடன் தொலைப்பேசியில் பிரெஞ்சு அரசுத்தலைவர் மக்ரோன், திருத்தந்தையுடன் தொலைப்பேசியில் 

திருத்தந்தை பிரான்சிஸ், பிரெஞ்சு அரசுத்தலைவர் - தொலைப்பேசியில்

கோவிட்19 தொற்றுக்கிருமியின் உலகளாவிய பரவல் காலத்தில், ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவேண்டிய பதிலிறுப்பு, மற்றும், வறுமைப்பட்ட நாடுகளின் கடன்களை இரத்து செய்வது குறித்த விடயங்கள் இந்த உரையாடலில் இடம்பெற்றன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 21, இச்செவ்வாய் பிற்பகல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், பிரெஞ்சு அரசுத்தலைவர், இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) அவர்களும், தொலைப்பேசியில் 45 நிமிடங்கள் உரையாடினர் என்று, அரசுத்தலைவரின் அலுவலகம் கூறியுள்ளது.

கோவிட்19 தொற்றுக்கிருமியின் உலகளாவிய பரவல் காலத்தில், ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவேண்டிய பதிலிறுப்பு, மற்றும், வறுமைப்பட்ட நாடுகளின் கடன்களை இரத்து செய்வது அல்லது குறைப்பது குறித்த விடயங்கள் இந்த உரையாடலில் இடம்பெற்றன என்று கூறப்பட்டுள்ளது.

பிரெஞ்சு நாட்டில் நிலவும் தொற்றுக்கிருமியின் தாக்கம் குறித்து தான் தொடர்ந்து கவனித்து வருவதாகவும், தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டோருக்காக தான் செபித்து வருவதாகவும் திருத்தந்தை கூறினார் என்று, பிரெஞ்சு அரசுத்தலைவரின் அலுவலகம் கூறியுள்ளது

இந்த தொலைப்பேசி அழைப்பு குறித்து சிறப்பான எந்த செய்தியையும் வெளியிடாத திருப்பீட செய்தித்துறை அலுவலகம், திருத்தந்தைக்கும், அரசுத்தலைவர்களுக்கும் அவ்வப்போது தொலைப்பேசி  அழைப்புக்கள் நிகழ்வது வழக்கம் என்று கூறியுள்ளது.

இவ்வாண்டு ஏப்ரல் 12, உயிர்ப்புப் பெருவிழாவன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய 'ஊர்பி எத் ஓர்பி' சிறப்புச் செய்தியில், வறிய நாடுகளின் கடன் சுமைகள் மன்னிக்கப்படாவிடினும், அவை குறைக்கப்படுவதற்கு, செல்வம் மிகுந்த நாடுகள் முன்வரவேண்டும் என்று விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, ஆப்ரிக்க நாடுகளின் மீதுள்ள கடன் சுமையை தள்ளுபடி செய்வதாக, பிரெஞ்சு அரசுத்தலைவர், இம்மானுவேல் மக்ரோன் அவர்கள், ஏப்ரல் 14ம் தேதி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 April 2020, 14:30