தேடுதல்

Vatican News
அர்ஜென்டினாவின் lujan மரியன்னை பெருங்கோவில் அர்ஜென்டினாவின் lujan மரியன்னை பெருங்கோவில்  (AFP or licensors)

அர்ஜென்டீனா - 500ம் ஆண்டு நிறைவுக்கு திருத்தந்தை செய்தி

எம்மாவு நோக்கிச் சென்ற சீடர்கள், "எங்களோடு தங்கும்; பொழுதும் போயிற்று" (லூக்கா 24:29) என்று எழுப்பிய வேண்டுதல், நாம் தற்போது எழுப்பவேண்டிய வேண்டுதலாக அமையவேண்டும் – திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

'முக வாட்டத்தோடு' எம்மாவு என்ற ஊருக்குச் சென்ற சீடர்களைப்போல நாம் இந்நாள்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜென்டீனா தலத்திருஅவைக்கு அனுப்பிய ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டு 500 ஆண்டுகள்

1520ம் ஆண்டு, அர்ஜென்டீனா நாட்டில் முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம், ஏப்ரல் 1, இப்புதனன்று, நடைபெற்ற வேளையில், இந்த சிறப்புத் திருப்பலியை, Rio Gallegos மறைமாவட்ட ஆயர், Jorge García Cuerva அவர்கள், மக்களின் பங்கேற்பின்றி, தனிப்பட்ட முறையில் நிறைவேற்றிய வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியிருந்த செய்தி வாசிக்கப்பட்டது.

இந்த 5ம் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாட, அந்நாட்டில் பல்வேறு இடங்களில் பெரும் விழாக்கள் திட்டமிடப்பட்டு வந்ததை தான் அறிந்திருந்ததாகவும், தற்போது எழுந்துள்ள இந்த தொற்றுக்கிருமி நெருக்கடியால், இந்த விழாக்கள் தனிப்பட்ட முறையில் நடத்தப்படுவது, வருத்தம் அளிப்பதாகவும் திருத்தந்தை தன் செய்தியில் கூறியுள்ளார்.

எம்மாவு சீடர்களின் செபம்

எருசலேமில் நடந்ததனைத்தையும் கண்டு மனமுடைந்து, இனி என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் எம்மாவு நோக்கிச் சென்ற சீடர்கள், அச்சத்துடன் வாழும் இன்றைய நம் நிலைக்கு அடையாளமாக உள்ளனர் என்பதை, தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று" (லூக்கா 24:29) என்று அச்சீடர்கள் எழுப்பிய வேண்டுதல், நாம் தற்போது எழுப்பவேண்டிய வேண்டுதலாக அமையவேண்டும் என்று கூறினார்.

ஏனைய மக்களுடன் தொடர்புகள் தடைபட்டுள்ள இவ்வேளையில், எம்மாவு சீடர்களுடன் அப்பத்தைப் பகிர்ந்துகொண்ட ஆண்டவரின் திருவிருந்து உணர்வை பகிர்ந்துகொள்ளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள இத்தருணம் நம்மை அழைக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

அர்ஜென்டீனா நாட்டில் நிறைவேற்றப்பட்ட முதல் திருப்பலியின் 500ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட, தனியே திருப்பலி நிறைவேற்றும் ஆயர், Jorge García Cuerva அவர்களுடன், அர்ஜென்டீனா மக்கள் ஆன்மீக அளவில் இணைந்துள்ளனர் என்றும், அவர்களோடு தானும் இவ்விழாவில் மனம் ஒன்றி இணைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

02 April 2020, 14:00