திருத்தந்தையுடன், மால்ட்டா அமைப்பின் தலைவர், சகோதரர் Giacomo Dalla Torre - கோப்புப் படம் திருத்தந்தையுடன், மால்ட்டா அமைப்பின் தலைவர், சகோதரர் Giacomo Dalla Torre - கோப்புப் படம் 

மால்ட்டா அமைப்பு தலைவரின் மரணம் – திருத்தந்தை அனுதாபம்

கிறிஸ்துவுக்கும், நற்செய்தி விழுமியங்களுக்கும் மிகுந்த பிரமாணிக்கமான முறையில் வாழ்ந்து, திருஅவையின் வளர்ச்சிக்காக தன் பணிகளை அர்ப்பணித்தவர், சகோதரர் Giacomo Dalla Torre

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மால்ட்டா அமைப்பினர் (Order of Malta) என்ற குழுவின் தலைவராகப் பணியாற்றிவந்த சகோதரர் Giacomo Dalla Torre அவர்கள், ஏப்ரல் 29, இப்புதனன்று இறைவனடி சேர்ந்ததையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வமைப்பினருக்கு தன் ஆழ்ந்த அனுதாபத்தைக் கூறி, தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.

கிறிஸ்துவுக்கும், நற்செய்தி விழுமியங்களுக்கும் மிகுந்த பிரமாணிக்கமான முறையில் வாழ்ந்து, திருஅவையின் வளர்ச்சிக்காக தன் பணிகளை அர்ப்பணித்த சகோதரர் Giacomo Dalla Torre அவர்களின் மறைவால் துயருறும் மால்ட்டா அமைப்பினருக்கு தன் ஆழ்ந்த வருத்தங்களையும் செபங்களையும் தெரிவிப்பதாக திருத்தந்தை இச்செய்தியில் கூறியுள்ளார்.

மால்ட்டா அமைப்பினரின் இடைக்காலத் தலைவராகப் பணியாற்றும், சகோதரர், 'Ruy Gonçalo Do Valle Peixoto அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இத்தந்திச் செய்தியில், மறைந்த சகோதரர் Giacomo அவர்களின் ஆன்ம இளைப்பற்றிக்காகவும், அவரது குடும்பத்தினருக்கு தன் ஆழ்ந்த வருத்தத்தையும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

1944ம் ஆண்டு, டிசம்பர் 9ம் தேதி, உரோம் நகரில் பிறந்த Giacomo அவர்கள், தன் கல்வியை உரோம் நகரின் சாப்பியென்சா பல்கலைக் கழகத்தில் நிறைவு செய்தபின், உர்பானியானா பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.

1985ம் ஆண்டு மால்ட்டா அமைப்பில் இணைந்த Giacomo அவர்கள், 1993ம் ஆண்டு, இவ்வமைப்பின் முழுமையான உறுப்பினராக உறுதி மொழி எடுத்து, 2008ம் ஆண்டு இவ்வமைப்பின் இணைத்தளபதியாகவும், 2018ம் ஆண்டு இவ்வமைப்பின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1048ம் ஆண்டு, எருசலேம் நகரில் உருவாக்கப்பட்ட ரோட்ஸ் (Rhodes) மற்றும் மால்ட்டா (Malta) இராணுவ அமைப்பு, 120க்கும் மேற்பட்ட நாடுகளில், நலப்பணிகள் மற்றும் சமுதாயப்பணிகளில் மனிதாபிமான உதவிகளை வழங்கிவருகிறது.

சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில், வன்முறைகளுக்கு உள்ளாகும் மக்கள் நடுவே தற்போது பணியாற்றிவரும் இவ்வமைப்பினரின் மனிதாபிமானப் பணிகளை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் அவையில், இவ்வமைப்பு நிரந்தரப் பார்வையாளராகக் கலந்துகொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 April 2020, 14:44