தேடுதல்

Vatican News
மக்களின் பங்கேற்பு அதிகமின்றி திருத்தந்தை பிரான்சிஸ் உயிர்ப்பு ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றுதல் மக்களின் பங்கேற்பு அதிகமின்றி திருத்தந்தை பிரான்சிஸ் உயிர்ப்பு ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றுதல்  (ANSA)

உயிர்ப்பு விழா திருப்பலியும் ‘ஊர்பி எத் ஓர்பி’ செய்தியும்

பொதுவாக, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தின் மேல்மாடத்திலிருந்து திருத்தந்தை வழங்கும் ‘ஊர்பி எத் ஓர்பி’ செய்தி,யும், ஆசீரும், இந்த உயிர்ப்பு ஞாயிறன்று, கோவிட் 19 கிருமியின் நெருக்கடி நிலையால், பெருங்கோவிலில் இருந்து வழங்கப்பட்டன

மேரி தெரேசா : வத்திக்கான்

ஏப்ரல் 12, இஞ்ஞாயிறு, பகல் 11 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்திருப்பலியின் இறுதியில், பெருங்கோவிலின் பீடத்திற்குமுன் நின்றவண்ணம், ஊருக்கும், அதாவது உரோம் நகருக்கும், உலகுக்கும் வழங்கும் ‘ஊர்பி எத் ஓர்பி’ செய்தி, வாழ்த்து மற்றும், ஆசீரை வழங்கினார். இந்த சிறப்பு செய்தியையும், ஆசீரையும், பொதுவாக, கிறிஸ்மஸ் மற்றும் உயிர்ப்புப் பெருவிழா நாள்களில், வத்திக்கான் பெருங்கோவில் வளாகத்தின் மேல்மாடத்திலிருந்து திருத்தந்தை வழங்குவார். ஆனால், இந்த உயிர்ப்பு ஞாயிறன்று, கோவிட் 19 கிருமி விளைவித்துள்ள நெருக்கடி நிலையால், இந்த சிறப்புச் செய்தியை புனித பேதுரு பெருங்கோவிலில் இருந்து திருத்தந்தை வழங்கினார்.

உயிர்ப்புப் பெருவிழாவின் ‘ஊர்பி எத் ஓர்பி’ செய்தியை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகினர் எல்லாருக்கும் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதன்பின்னர் ‘ஊர்பி எத் ஓர்பி’ ஆசீரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். ஊடகங்கள் வழியே வழங்கப்பட்ட இந்த ஆசீரை, தகுந்த தயாரிப்பு, மரியாதை மற்றும், பக்தியுடன் பெறுகிறவர்களுக்குப் பரிபூரண பலன் உண்டு.

12 April 2020, 13:08