தேடுதல்

புதன் மறைக்கல்வியுரை 180320 புதன் மறைக்கல்வியுரை 180320 

மார்ச் 18, திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்

"கடவுளின் கருணை நம் மகிழ்வாக, நம் விடுதலையாக உள்ளது. நாம் மன்னிப்பு பெறவேண்டிய தேவை இருப்பதால், நாம் மன்னிக்கவும் தேவை உள்ளது" - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் உயிரிழந்தோருக்கென மார்ச் 18 இப்புதனன்று திருப்பலியை ஒப்புக்கொடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்கருத்தை, தன் டுவிட்டர் செய்தியிலும் பதிவு செய்திருந்தார்.

"தொற்றுக்கிருமியால் இறந்தோருக்கென இணைந்து செபிப்போம். சிறப்பாக, இந்த நெருக்கடி நேரத்தில் பிறருக்கு நலம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு, அதனால் தங்கள் உயிரை இழந்த பணியாளர்களுக்காக வேண்டிக்கொள்வோம்" என்ற சொற்கள், திருத்தந்தையின் @pontifex பக்கத்தில் வெளியாயின.

"நம்மை நெருங்கியிருக்கும் இறைவன், நாமும் மற்றவரோடு நெருங்கியிருக்கும்படி விழைகிறார். தற்போதைய தொற்று ஆபத்தினால் ஒருவரோடு நெருங்கியிருக்க இயலாவிடினும், செபம், உதவிகள் வழியே மற்றவர்களோடு நெருங்கியிருக்கும் பழக்கத்தை நாம் புதுப்பித்துக்கொள்வோம்" என்ற சொற்கள், திருத்தந்தை இப்புதனன்று வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியாக இருந்தன.

அத்துடன், இயேசு வழங்கிய பேறுகளைப் பற்றி மறைக்கல்வி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "கடவுளின் கருணை நம் மகிழ்வாக, நம் விடுதலையாக உள்ளது. நாம் மன்னிப்பு பெறவேண்டிய தேவை இருப்பதால், நாம் மன்னிக்கவும் தேவை உள்ளது" என்ற சொற்களை, இப்புதனன்று வெளியிட்ட மூன்றாவது டுவிட்டர் செய்தியில் பதிவு செய்திருந்தார்.

மேலும், மன்னிக்க மறுத்த பணியாள் உவமையை மையப்படுத்தி, இச்செவ்வாய் காலை மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையின் ஓர் எண்ணத்தை ஒரு டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

"இயேசுவின் உவமை (மத்தேயு 18:23-35) நமக்குத் தெளிவாகக் கூறுவது இதுதான்: மன்னிப்பு கேட்பது, மன்னிப்பு வழங்குவதாகவும். இவ்விரண்டும் பிரிக்க முடியாதவை, இணைந்து செல்பவை. மன்னிப்பது, விண்ணகம் செல்வதற்கு ஒரு நிபந்தனை" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

மேலும், தவக்காலம் என்று பொருள்படும், #Lent என்ற 'ஹாஷ்டாக்'குடன் திருத்தந்தை வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் செய்தியில், "கடவுளால் அன்புகூரப்படுவதற்கு நம்மையே அனுமதிப்போம், அவ்விதம், நாம் அன்பை வழங்க இயலும். உயிர்ப்பை நோக்கி நடந்து செல்ல எழுந்து நிற்போம்" என்ற சொற்களைப் பதிவு செய்திருந்தார்.

இதற்கிடையே, இவ்வாண்டு, ஜூன் 7ம் தேதி முதல், 14ம் தேதி முடிய, காங்கோ குடியரசு நாட்டில் நடைபெறவிருக்கும் தேசிய திருநற்கருணை மாநாட்டில் கலந்துகொள்ள, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பிரதிநிதியாக நியமித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 March 2020, 15:18