தேடுதல்

Vatican News
புதன் பொது மறைக்கல்வியுரை புதன் பொது மறைக்கல்வியுரை  (ANSA)

மார்ச் 27 மாலை திருத்தந்தையின் செபம், சைகை மொழியிலும்

மார்ச் 5, குருத்தோலை ஞாயிறு திருவழிபாட்டை உரோம் நேரம் பகல் 11 மணிக்கும், ஏப்ரல் 9, புனித வியாழன் ஆண்டவரின் இராவுணவு திருப்பலியை மாலை 6 மணிக்கும், திருத்தந்தை வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றுவார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 தொற்றுக்கிருமி பரவலைத் தடை செய்யவும், அதன் அவசரகால நெருக்கடியையும் முன்னிட்டு, மார்ச் 27, இவ்வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும், செபம் மற்றும், ஊருக்கும்,  உலகுக்குமென வழங்கும் 'ஊர்பி எத் ஓர்பி (Urbi et Orbi)' சிறப்பு ஆசீர், சைகை மொழியிலும்,  

நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செப நிகழ்வில் உலக மக்கள் எல்லாரும் பங்குகொள்ள வேண்டும் என்று திருத்தந்தை விடுத்திருந்த அழைப்பை ஏற்று, இத்தாலிய ஆயர் பேரவையின் மாற்றுத்திறனாளிகள்  மறைக்கல்வி பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருள்சகோதரி வெரோனிக்கா தொனாத்தெல்லா அவர்கள், சைகை மொழயில், திருத்தந்தையின் இச்செப நிகழ்வை விளக்குகிறார். இத்தாலிய ஆயர் பேரவையின் TV2000 என்ற தொலைக்காட்சி அலைவரிசையில், சைகை மொழியில் இந்நேரடி ஒளிபரப்பை நடத்துகிறார் அருள்சகோதரி தொனாத்தெல்லா.

திருத்தந்தையின் புனித வாரத் திருவழிபாடுகள்

Covid-19 தொற்றுக்கிருமியின் பரவல் உருவாக்கியுள்ள நெருக்கடியையொட்டி, திருவழிபாட்டு பேராயம் புனித வார வழிபாடுகளில் மேற்கொள்ளக்கூடிய வழிமுறைகளை, மீண்டும் ஒருமுறை, மார்ச் 25, இப்புதனன்று வெளியிட்டது. அதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருவழிபாடுகள் பற்றி மார்ச் 27, இவ்வெள்ளியன்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது,

திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பான பேரருள்திரு குய்தோ மரினி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தந்தை, புனித வாரத் திருவழிபாடுகளை, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் இறைமக்களின் பங்கேற்பின்றி நிறைவேற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது.

வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், மார்ச் 5, குருத்தோலை ஞாயிறு திருவழிபாட்டை உரோம் நேரம் பகல் 11 மணிக்கும், ஏப்ரல் 9, புனித வியாழன் ஆண்டவரின் இராவுணவு திருப்பலியை மாலை 6 மணிக்கும், ஏப்ரல் 10 புனித வெள்ளி  ஆண்டவரின் திருப்பாடுகள் வழிபாட்டை மாலை 6 மணிக்கும், இரவு 9 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சிலுவைப் பாதை பக்தி முயற்சியையும், ஆண்டவரின் உயிர்ப்புத் திருவிழிப்பை ஏப்ரல் 11 சனிக்கிழமை இரவு 9 மணிக்கும், ஆண்டவரின் உயிர்ப்பு ஞாயிறு பெருவிழா திருப்பலியை ஏப்ரல் 12, ஞாயிறு பகல் 11 மணிக்கும், திருப்பலி நிறைவேற்றி, இறுதியில் ஊர்பி எத் ஓர்பி ஆசிரை வழங்குவார், திருத்தந்தை பிரான்சிஸ். 

27 March 2020, 16:14