சாந்தா மார்த்தா சிற்றாலய திருப்பலியின் இறுதியில் - 270320 சாந்தா மார்த்தா சிற்றாலய திருப்பலியின் இறுதியில் - 270320 

மார்ச் 27, திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்

உரையாடல் தேவைப்படும்போது உரையாடுவோம், ஆனால், கடுங்கோபத்தின்முன், மற்றவரைப் பேச அனுமதிக்கவும், நாம் மௌனமாக இருக்கவும் தேவையான துணிவை ஆண்டவரிடம் கேட்போம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 27, இவ்வெள்ளி காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியின் துவக்கத்தில் கூறியவை, அவரின் மறையுரை போன்றவற்றை மையப்படுத்தி, ஹாஷ்டாக்குகளுடன் டுவிட்டர் செய்திகளையும் வெளியிட்டுள்ளார்.

நாம் எல்லாரும் இணைந்து செபிப்போம் என்ற (#PrayTogether) ஹாஷ்டாக்குடன் திருத்தந்தை வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில், “உண்பதற்குப் போதுமானவை இல்லாமல் துன்புறும் குடும்பங்கள், தனிமையில் வாடும் வயது முதிர்ந்தோர், மருத்துவமனைகளிலுள்ள நோயாளிகள் ஆகியோர் பற்றி, நிறையப் பேர் மிகுந்த கவலை கொண்டுள்ளனர், அவர்களுக்காகச் செபிக்கின்றனர் மற்றும், அவர்களுக்கு ஏதாவது உதவிகள் சென்றடைய முயற்சிக்கின்றனர். இவர்களின் இதயங்களில் இத்தகைய நல்லுணர்வுகளைத் தூண்டிய கடவுளுக்கு நன்றி” சொல்வோம் என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.

மேலும், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய மறையுரையை வைத்து (#HomilySantaMarta) என்ற ஹாஷ்டாக்குடன் திருத்தந்தை வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “தீய ஆவிக்கு எதிராகப் போராடுவதற்கு ஆண்டவரிடம் மன்றாடுவோம், உரையாடல் தேவைப்படும்போது உரையாடுவோம், ஆனால், கடுங்கோபத்தின்முன், மற்றவரைப் பேச அனுமதிக்கவும், நாம் மௌனமாக இருக்கவும் தேவையான துணிவை ஆண்டவரிடம் கேட்போம்” என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 27, இவ்வெள்ளி காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியை நேரடி ஒளிபரப்பில் காண்பதற்கென, https://www.youtube.com/watch?v=B8wh8lC40kU என்ற யூடியூப் முகவரியும், டுவிட்டர் செய்தியோடு இணைத்து வெளியிடப்பட்டிருந்தது.

இன்னும்,  கொரோனா தொற்றுக்கிருமி அவசரகால நெருக்கடியை முன்னிட்டு, மார்ச் 27, இவ்வெள்ளிக்கிழமை உரோம் நேரம் மாலை ஆறு மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்துகின்ற, செபம் மற்றும், 'ஊர்பி எத் ஓர்பி (Urbi et Orbi)' சிறப்பு ஆசீர், வத்திக்கான் செய்தித்துறை அலைவரிசைகள் வழியாக நேரடி ஒலி மற்றும், ஒளிபரப்பு செய்யப்படும் என திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் மீண்டும் பதிவாகியிருந்தது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 March 2020, 15:19