தேடுதல்

Vatican News
உரோம் மேயர் விர்ஜீனியா ராஜ்ஜி 280320 உரோம் மேயர் விர்ஜீனியா ராஜ்ஜி 280320  (Vatican Media)

மார்ச் 28, 27, திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்

மார்ச் 28, இச்சனிக்கிழமை காலையில் உரோம் மேயர் விர்ஜீனியா ராஜ்ஜி அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் தனியே சந்தித்து உரையாடினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“இந்நாள்களில், கொரோனா தொற்றுக்கிருமியின் எதிர்விளைவுகளைக் காணத் துவங்கியுள்ளோம், அவற்றில் ஒன்று பசி. இந்நெருக்கடியின் பின்விளைவுகளையும்  நாம் பார்க்கத் துவங்கியுள்ளோம். எனவே, தேவையில் இருக்கும் குடும்பங்களுக்காக நாம் எல்லாரும் இணைந்து செபிப்போம், இக்கொள்ளை நோயால் அவை ஏற்கனவே பசிக்கொடுமையை அனுபவித்து வருகின்றன” என்று திருத்தந்தை இச்சனிக்கிழமையன்று தன் முதல் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.  

ஒன்றுசேர்ந்து செபிப்போம் #PrayTogether என்ற ஹாஷ்டாக்குடன் திருத்தந்தை வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில், இச்சனிக்கிழமையன்று அவர் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியை யூடியூப்பில் காண்பதற்கு உதவியாக, அதன் முகவரியையும் https://www.youtube.com/watch?v=5MOnNZymo1s இணைத்து வெளியிட்டுள்ளார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை ஆற்றிய மறையுரை கருத்தை வைத்து, #HomilySantaMarta என்ற ஹாஷ்டாக்குடன் திருத்தந்தை வெளியிட்ட 2வது டுவிட்டர் செய்தியில், “ஆவியானவர் எங்கிருக்கிறார் என்பதை அறியும் உணர்வையும், மீட்பின் பாதையை அறியும் உணர்வையும், இறைமக்கள் கொண்டிருந்தனர். ஏன் என்று அவர்களால் அந்த உணர்வை விளக்க இயலவில்லை, ஆனால் அவர்கள் அவரைப் பின்சென்றனர். அவர்கள் ஒருபோதும் சோர்வடைந்ததில்லை” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும், மார்ச் 27, இவ்வெள்ளி மாலையில், திருத்தந்தை, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் தலைமையேற்று நடத்திய செப நிகழ்வு மற்றும், ஊர்பி எத் ஓர்பி ஆசீர் பற்றிய இரு டுவிட்டர் செய்திகளையும், அவற்றை சமுதாய ஊடகங்களில் காண்பதற்கு உதவியாக, முகவரிகளையும் http://w2.vatican.va/content/francesco/en/homilies/2020/documents/papa-francesco_20200327_omelia-epidemia.html வெளியிட்டுள்ளார். 

“உரோம் நகரையும், உலகையும் அணைத்துக்கொள்ளும் இந்த தூண்களிலிருந்து, ஆறுதலின் அரவணைப்பாக, கடவுளின் ஆசீர் உங்கள் மீது வந்திறங்குவதாக” என்ற சொற்களும், “ஆண்டவரே, நீர் புயலின் பிடியில் எம்மை விட்டுவிடாதேயும், “அஞ்சாதீர்கள்” (மத்.28:5) என்று மீண்டும் எம்மிடம் சொல்லும், பேதுருவோடு நாங்களும், எங்களின் கவலைகளை உம்மிடம் வைக்கின்றோம், ஏனெனில் நீங்கள் எம்மீது அக்கறை கொண்டிருக்கிறீர் (cf.1பேதுரு 5:7)” என்ற சொற்களும், இவ்வெள்ளி மாலை டுவிட்டர் செய்திகளில் பதிவாகியிருந்தன.     

மேலும் இச்சனிக்கிழமை காலையில் உரோம் மேயர் விர்ஜீனியா ராஜ்ஜி அவர்கள் உட்பட, சிலரையும் வத்திக்கானில் தனியே சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்

28 March 2020, 15:24