இயேசுவின் மலைப்பொழிவு இயேசுவின் மலைப்பொழிவு 

புதன், வியாழன் - திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்

இத்தாலியின் அனைத்து ஆலயங்களிலும், ஏப்ரல் 3ம் தேதி முடிய வழிபாடுகள் தடைசெய்யப்பட்டுள்ளதையடுத்து, வருகிற ஞாயிறன்று, புனித பேதுரு பெருங்கோவிலில், காலை 10.30 மணிக்கு நடைபெறும் திருப்பலி, நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மார்ச் 12, இவ்வியாழனன்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் வழங்கிய மறையுரையின் தொடர்ச்சியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில், "மனித துன்பங்களைப் பற்றி நம்மை வந்தடையும் விவரங்கள், நம் உள்ளங்களைத் துளைத்து, பிறருக்காக ஏதாவது செய்வதற்கும், அக்கறையற்ற நிலையில் நாம் வீழாமல் இருப்பதற்கும் இறையருளை வேண்டுவோம்" என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

"தவக்காலப் பயணம், மிகவும் நலிவுற்றோருக்கு காட்டப்படும் பிறரன்பை நோக்கிய பயணம்" என்ற சொற்களை, தன் 2வது டுவிட்டர் செய்தியாக திருத்தந்தை வெளியிட்டார்.

புதனன்று வெளியான 3 டுவிட்டர் செய்திகள்

மேலும், இப்புதனன்று தான் வழங்கிய மறைக்கல்வி உரை, தவக்காலம், மற்றும், இப்புதன் மாலையில் அன்னை மரியாவை நோக்கி எழுப்பிய வேண்டுதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேலும் மூன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்டார்.

"நாம் நல்வழியில் வாழ்வதற்குத் தேவையானவை, முக்கியமானவை எவை என்பதையும், அதேவேளையில், எவை இரண்டாம் தரமானவை, எவை இல்லாமல் நம்மால் வாழமுடியும் என்பதையும் கண்டுகொள்வதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்" என்ற சொற்களை, #Beatitudes என்ற ஹாஷ்டாக்குடன் திருத்தந்தை வெளியிட்டார்.

இப்பூதன் பிற்பகலில், 'தவக்காலம்' என்ற ஹாஷ்டாக்குடன், இத்தாலிய மொழியில் மட்டும் வெளியிடப்பட்ட டுவிட்டர் செய்தியில், "மிகவும் கடினமானச் சூழலையும், மனஉறுதியுடன், பொறுப்புணர்வுடன், நம்பிக்கையுடன் எதிர்கொள்ள நான் ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கிறேன். துன்புற்று, உயிர்த்த இயேசுவின் மீது பார்வையைப் பதித்து, இத்தவக்காலத்தை வாழ்வீர்களாக" என்ற சொற்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பதிவு செய்திருந்தார்.

மேலும், கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடியையொட்டி, இப்புதனன்று, அன்னை மரியாவிடம் திருத்தந்தை எழுப்பியிருந்த வேண்டுதலின் இறுதி சொற்கள், மற்றொரு டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

நேரடி ஒளிபரப்பில் ஞாயிறு திருப்பலி

இதற்கிடையே, இத்தாலியின் அனைத்து ஆலயங்களிலும், ஏப்ரல் 3ம் தேதி முடிய வழிபாடுகள் தடைசெய்யப்பட்டுள்ளதையடுத்து, வத்திக்கான் நாட்டின் பொறுப்பாளர், கர்தினால் ஆஞ்செலோ கொமாஸ்த்ரி அவர்கள், மார்ச் 15, வருகிற ஞாயிறன்று, புனித பேதுரு பெருங்கோவிலில், காலை 10.30 மணிக்கு நிறைவேற்றும் ஞாயிறு திருப்பலி, நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 March 2020, 14:43