இயேசுவின் தோற்ற மாற்றம் இயேசுவின் தோற்ற மாற்றம் 

தங்களுக்குள் வாழ்வை வரவேற்பவர்கள், குறிப்பாக, பெண்களே

திருத்தந்தை : நம் கடினமான உள்ளத்தை ஊடுருவிச் சென்று, அதை இறைவன் பக்கம் திருப்புவதே, இறைவனின் பார்வையில், உண்மையான வேண்டுதல்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் நிறைவேற்றப்படும் திருப்பலியை மக்கள் நேரடி ஒளிபரப்பில் காண்பதற்கு உதவும்வண்ணம், ‘யூ டியூப்’ முகவரியை (https://www.youtube.com/watch?v=ojGaZWm93WU), மார்ச் 9, இத்திங்களன்று, தன் முதல் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியில் பரவிவரும் கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தையொட்டி, மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் நோக்கில், மூவேளை செப உரைகளையும், புதன் மறைக்கல்வி உரைகளையும் தன் நூலகத்திலிருந்து வழங்கி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசிகள் அனுமதிக்கப்படாத தன் காலைத் திருப்பலியை மக்கள் நேரடியாக பார்ப்பதற்கு உதவும் வகையில் அது குறித்த விவரங்களை இத்திங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதே நாளில், தவக்காலத்தையும், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் வழங்கிய மறையுரையையும் மையப்படுத்தி, மேலும் இரு டுவிட்டர் செய்திகளை திருத்தந்தை வெளியிட்டுள்ளார்.

#Lent என்ற 'ஹாஷ்டாக்'குடன் அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "நம் தவக்கால வேண்டுதல், எத்தனையோ வடிவங்களில் வெளியாகலாம், ஆனால், நம் கடினமான உள்ளத்தை ஊடுருவிச் சென்று, அதை இறைவன் பக்கம் திருப்புவதே, இறைவனின் பார்வையில், உண்மையான வேண்டுதல்" என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

அத்துடன், சாந்தா மார்த்தா இல்லத்தில் வழங்கிய மறையுரையின் தொடர்ச்சியாக, "நாம் பாவம் செய்துவிட்டோம் என்ற வெட்க உணர்வு, இறைவனின் உள்ளத்தைத் தொடுகிறது, அவரும் பரிவுடன் நமக்கு பதிலிறுக்கிறார். நம் பாவங்களுக்காக வெட்கப்படும் அருளுக்காக இன்று வேண்டுவோம்" என்ற சொற்களை தன் டுவிட்டர் செய்தியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார்.

மேலும், மார்ச் 8, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட உலக மகளிர் நாளை முன்னிட்டு தன் முதல் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்களுக்குள் வாழ்வை வரவேற்பவர்கள், குறிப்பாக, பெண்களே எனவும், வாழ்வு என்பது பொருட்களை உற்பத்தி செய்வதில் அல்ல, மாறாக, பொருட்களை அதன் நிலையிலேயே அப்படியே ஏற்பதைச் சார்ந்துள்ளது என்பதை பெண்களே காட்டி நிற்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.

அதே ஞாயிறன்று அவர் வெளியிட்டுள்ள இரண்டாவது டுவிட்டர் செய்தியில், இயேசு மலைமீது தோற்ற மாற்றம் பெற்றது பற்றி விவரிக்கும் அந்நாளின் நற்செய்தி வாசகம் குறித்து அதில் தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.

இயேசு துன்புற்று, இறந்து, மீண்டும் உயிர்த்தெழ வேண்டும் என்ற மறையுண்மையை முற்றிலுமாகப் புரிந்துகொள்வதற்கு, இன்றைய நற்செய்தி நமக்கு வழியைத் திறக்கிறது  என, தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 March 2020, 16:07