கிறிஸ்மஸ் பெருவிழாவன்று பேதுரு வளாகத்தில் சுவிஸ் வீரர்கள் கிறிஸ்மஸ் பெருவிழாவன்று பேதுரு வளாகத்தில் சுவிஸ் வீரர்கள் 

மார்ச் 17, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

சுவிஸ் கார்ட்ஸ் எனப்படும் திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்கள், புதிதாக பணியில் சேரும் நிகழ்வு, வருகிற அக்டோபர் 4ம் தேதி நடைபெறும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மார்ச் 17, இச்செவ்வாயன்று #PrayTogether என்ற ஹாஷ்டாக்குடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில், தங்களின் உள்ளத்தில் மிகுந்த தனிமையை அனுபவிக்கும் வயது முதிர்ந்தோருக்காக, இணைந்து செபிப்போம் என்று கூறியுள்ளார்.

“இந்நேரத்தில் தங்களின் உள்ளத்தில் மிகுந்த தனிமையை அனுபவிக்கும் வயது முதிர்ந்தோருக்காக, ஒன்றுசேர்ந்து செபிப்போம், இவர்கள், பல நேரங்களில், அச்சத்தால் நிறைந்துள்ளனர். அவர்கள் நமக்கு ஞானத்தையும், வாழ்வையும், நம் கதையையும் வழங்கியவர்கள். நம் செபங்களால் அவர்களுக்கு அருகில் இருப்போம்” என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் தான் ஒவ்வொரு நாளும் நிறைவேற்றும் திருப்பலியை, நேரடி ஒளிபரப்பில் காண்பதற்கு உதவியாக, https://www.youtube.com/watch?v=vDmX5LrZ2KE என்ற யூடியூப் முகவரியையும், டுவிட்டர் செய்தியுடன் இணைத்து வழங்கியுள்ளார்

சுவிஸ் கார்ட்ஸ்

இன்னும், திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்களாகப் பணியாற்றும் ‘சுவிஸ் கார்ட்ஸ்’ அமைப்பில், இளையோரை புதிதாக சேர்க்கும் நிகழ்வு, கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடி காரணமாக, இலையுதிர் காலத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, மே மாதம் 6ம் தேதி நடைபெறும் இந்நிகழ்வு, கோவிட்-19 தொற்றுக்கிருமி நெருக்கடியால், வருகிற அக்டோபர் 4, ஞாயிறன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1527ம் ஆண்டில் உரோம் நகர் சூறையாடப்பட்டபோது, திருத்தந்தை 7ம் கிளமெண்ட் அவர்கள், பாப்பிறை மாளிகையைவிட்டுத் தப்பித்துச் செல்வதற்காகப் போராடிய 189 சுவிட்சர்லாந்து படைவீரர்களில் 147 பேர் உயிரிழந்தனர். இந்தப் படைவீரர்கள் உயிரிழந்த மே 6ம் நாளன்று, ஒவ்வோர் ஆண்டும் வத்திக்கானில் புதிய சுவிஸ் காவல் வீரர்கள் உறுதிமொழி எடுத்து பணியில் சேருகின்றனர்.

சுவிஸ் கார்ட்ஸ் எனப்படும் திருத்தந்தையின் மெய்க்காப்பாளர்கள், திருத்தந்தை நிகழ்த்தும் திருவழிபாடுகள், பொதுச் சந்திப்புக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கின்றனர். இன்னும் வத்திக்கான் மாளிகையையும் பாதுகாக்கின்றனர்.

இந்த சுவிஸ் மெய்க்காப்பாளர்கள், 19 முதல் 32 வயதுக்கு உட்பட்ட கத்தோலிக்க இளைஞராக இருக்கவேண்டும். குறைந்தது 5 அடி 9 அங்குலம் உயரத்தையும் கொண்டிருக்க வேண்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 March 2020, 15:34