செபமாலை செபிக்கும் திருத்தந்தை செபமாலை செபிக்கும் திருத்தந்தை 

இத்தாலிய செபமாலை நிகழ்வில் காணொளிச் செய்தி

செபமாலையின் மறையுண்மைகளில் மரியாவோடு இணைந்து, இயேசுவின் வாழ்வு, இறைத்தந்தையின் இரக்கமுள்ள முகம் ஆகியவற்றைத் தியானிப்போம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகம் கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடியை எதிர்கொண்டுவரும்வேளை, இக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும், அவர்களுக்குச் சிகிச்சை வழங்கும் நலப்பணியாளர்களுக்காக, இத்தாலிய ஆயர்கள் அழைப்பு விடுத்த தேசிய அளவிலான செபத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் ஆதரவளித்து அவர்களோடு இணைந்து செபித்தார்.

மார்ச் 19, இவ்வியாழன் உரோம் நேரம் இரவு ஒன்பது மணிக்கு இத்தாலி முழுவதும் இடம்பெற்ற செபமாலை பக்தி முயற்சியை காணொளிச் செய்தி வழியாக துவக்கி வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு விசுவாசியும், ஒவ்வொரு துறவற குழுமமும், ஒளியின் மறையுண்மைகளைத் தியானிப்பதற்கு அழைப்பு விடுக்கிறேன் என்று கூறினார்.  

இத்தாலி முழுவதும் ஒன்றித்திருப்பதன் அடையாளமாக, இத்தாலிய ஆயர் பேரவை ஏற்பாடு செய்த இந்த செப நேரத்தில் நான் என்னையும் இணைக்கின்றேன் என்றும், இதுவரை இடம்பெறாத ஒரு சூழலை எதிர்கொண்டுவரும் இவ்வேளையில், நாம் ஒருவர் ஒருவருக்கு உதவி செய்வோம், இவ்வாறே இத்தாலிய ஆயர்களிடமிருந்து நான் பல மடல்களைப் பெறுகிறேன் என்றும் திருத்தந்தை கூறினார்.

செபமாலை, தாழ்ச்சியுள்ளவர்கள் மற்றும், புனிதர்களின் செபமாகும், செபமாலையின் மறையுண்மைகளில் மரியாவோடு இணைந்து, இயேசுவின் வாழ்வு, இறைத்தந்தையின் இரக்கமுள்ள முகம் ஆகியவற்றைத் தியானிப்போம், நாம் அனைவரும், உண்மையிலேயே அவரால் ஆறுதல் அளிக்கப்பட வேண்டிய, மற்றும் அவரது அன்புப் பிரசன்னத்தில் போர்த்தப்பட வேண்டிய தேவையில் இருக்கிறோம் என்றும் திருத்தந்தை கூறினார்.

இந்த அனுபவத்தின் உண்மையை, நாம் மற்றவரோடு கொள்ளும் உறவு வழியாக அளக்கலாம், இந்த நெருக்கடியான சூழலில், நாம் ஒருவர் ஒருவருக்கு நெருக்கமாக இருப்போம், பிறரன்புச் செயலாற்றுவதில், புரிந்துகொள்வதில் பொறுமையாய் இருப்பதில், மன்னிப்பதில் முதல் ஆளாய் இருப்போம் என்று கூறியத் திருத்தந்தை, நீங்கள் வீடுகளிலே இருக்கலாம், ஆயினும், உங்கள் இதயங்கள் அனைவரையும் வரவேற்கவும், உதவுவதற்கும் தயாராக இருக்கட்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.   

இந்த இரவில், திருக்குடும்பத்தின் பாதுகாவலராகிய புனித யோசேப்பின் பரிந்துரையில் நம்மை அர்ப்பணிப்போம், நாசேரத்து தச்சுத்தொழிலாளர்கூட ஆபத்தான மற்றும், கசப்பான வாழ்வு பற்றி அறிந்திருக்கிறார், அவர் வருங்காலம் பற்றி கவலையடைந்திருந்தாலும், சில நேரங்களில் இருளில் நடக்கவும் தெரிந்து வைத்திருந்தார், எந்த வரையறையுமின்றி கடவுளின் திட்டத்தால் வழிநடத்தப்பட எப்போதும் தன்னை அனுமதித்தார் என்றும் திருத்தந்தை கூறினார்.

இறுதியில், இந்த நாட்டைப் பாதுகாத்தருளும் என்று புனித யோசேப்பை நோக்கி செபித்தார் திருத்தந்தை. அதன்பின், இத்தாலிய ஆயர் பேரவையின் செயலர் இந்த செபமாலை பக்தி முயற்சியை வழிநடத்தினார். இத்தாலி முழுவதும் மக்கள் தொலைக்காட்சி வழியாக இதில் பங்குகொண்டனர். வீடுகளின் பால்கனிகளில் விளக்குகளை ஏற்றி வைத்திருந்தனர்.   

மேலும், மார்ச் 18, புதன் பொது மறைக்கல்வியுரையின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய ஆயர்களின் இச்செப பக்திமுயற்சிக்கு தான் ஆதரவளிப்பதாகவும், அவர்களோடு இணைந்து செபிப்பதாகவும் உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 March 2020, 15:26