திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

இறைவா, உமது கரங்களால் இந்த தொற்றுநோயை நிறுத்தும்

நம் ஒவ்வொரு நாள் வாழ்வில், நம் குடும்பங்களில் இதுவரைக் காண இயலாமல் போன சிறு சிறு கருவூலங்களைக் காண, கொரோனா தொற்றுக்கிருமியின் நெருக்கடியை ஒரு வாய்ப்பாக கருதவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"இறைவா, உமது கரங்களால் இந்த தொற்றுநோயை நிறுத்தும் என்று இறைவனிடம் வேண்டினேன்" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "La Repubblica" என்ற இத்தாலிய நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

மார்ச் 15 கடந்த ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் உள்ள மேரி மேஜர் பெருங்கோவிலில் உள்ள அன்னை மரியா திரு உருவப்படத்திற்கு முன்பாகவும், புனித மார்சேல்லோ ஆலயத்தில் உள்ள திருச்சிலுவைக்கு முன்பாகவும் செபித்ததைக் குறித்து, கேள்வி எழுந்தபோது, இவ்வாறு கூறினார்.

கொரோனா தொற்றுக்கிருமியின் நெருக்கடி, நம்மை, இல்லங்களிலேயே தங்கும்படி செய்துள்ள வேளையில், நம் ஒவ்வொரு நாள் வாழ்வில், நம் குடும்பங்களில் இதுவரைக் காண இயலாமல் போன சிறு சிறு கருவூலங்களைக் காண, இதை ஒரு வாய்ப்பாக கருதவேண்டும் என்று திருத்தந்தை தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

தொடர்புக் கருவிகளின் பெருக்கத்தாலும், நம் பணிகளின் நெருக்கடியாலும் இதுவரை மெய் நிகர் தொடர்புகளில் இருந்த நாம், தற்போது குடும்பங்களில் ஒருவர் ஒருவரை நேருக்கு நேர் சந்தித்து, நம் தொடர்புகளை நிலைநாட்ட இது நல்லதொரு நேரம் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

நோயுற்றோருக்கு பணிகள் புரியும் நலப்பணியாளர்களைக் குறித்து சிறப்பாகப் பேசிய திருத்தந்தை, இப்பணியாளர்களின் குடும்பங்களுக்காகவும், நோயில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்காகவும் சிறப்பாக செபிக்குமாறு தன் பேட்டியில் விண்ணப்பித்தார்.

தங்கள் சொந்த நலனை முன்னிலைப்படுத்தாமல் உழைக்கும் நலப்பணியாளர்கள் மற்றும் ஏனைய சுயவிருப்பப் பணியாளர்கள் ஆகியோர், பிறரன்பின் கண்கூடான எடுத்துக்காட்டுக்கள் என்பதை தன் பேட்டியில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நெருக்கடி நேரத்தில் ஆறுதல் வழங்குதல் என்ற பணி, நம் அனைவருக்கும் உள்ள தலையாயக் கடமை என்று கூறினார்.

நாம் அனைவரும் நம்பிக்கையுடன் வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை இப்பெட்டியின் இறுதியில் குறிப்பிட்டத் திருத்தந்தை, கடவுள் பற்று அற்றவர்களும், இவ்வேளையில் ஒரே குடும்பமாக இணைந்து வந்து, பிறருக்கு உறுதுணையாக வாழ முடியும் என்று எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 March 2020, 15:31